கொரோனா சிகிச்சை- ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்க ஒப்புதல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் மருந்தை வழங்க அமெரிக்க அரசு முழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக  அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (எஃப்.டி.ஏ), “கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீளும் காலத்தை ரெம்டெசிவிர் சராசரியாக ஐந்து நாட்கள் குறைப்பது மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு எங்களது ஒப்புதல் பெறும் முதல் மருந்து வெக்லரி (ரெம்டெசிவரின் வர்த்தக பெயர்). 12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, குறைந்தது 40 கிலோ உடல் எடை கொண்ட, மருத்துவமனை கவனிப்பு தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு இதை பயன்படுத்தலாம்.” என்று தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த மருந்து குறித்து முன்னதாக கருத்து தெரிவித்திருந்த உலக சுகாதார நிறுவனம், கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதில் ரெம்டெசிவிரின் பங்கு சிறிதளவு முதல் பூஜ்யம் வரை மட்டுமே உள்ளது.

எமது தனிப்பட்ட ஆய்வுகளின் வாயிலாக இதுகுறித்து தெரியவந்துள்ளது.”  என்று கூறியுள்ளது. இருந்தும் உலக சுகாதார நிறுவனத்தின்  இந்த கூற்றுக்கு ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான கிலிட் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டிருந்தது என்றும் அதைத்தொடர்ந்து, அவர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாகவும் அறிவித்துள்ளது.