கொரொனோவுக்கெதிராக மானிடம்காக்க அணிதிரள் உலகு ஈழத்தமிழர்கள் அழிந்திடாது காக்கவும் அணிதிரள வேண்டும்

22.05. 1972இல் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் இறைமையை ஒற்றையாட்சிப் பாராளுமன்றம் மூலம் சிங்களவர்களுடன் பகிர்ந்து வாழ்வதற்கு பிரித்தானியா வழங்கிய சோல்பரி அரசியலமைப்பு 29 (2) சட்டப்பாதுகாப்பை வன்முறைப்படுத்தித் தன்னிச்சையாகத் தான் பிரகடனப்படுத்திய சிங்கள பௌத்த சிறிலங்கா குடியரசு என்னும் அரசால்ää ஈழத்தமிழர்களை ஆள்வதற்கான அரசியலமைப்புச் சட்டத்தகுதியை சிறிலங்கா அரசு இழந்தமை உலக வரலாறு.

ஆயினும் இன்றுவரை 48 ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்களின் இறைமையை ஆக்கிரமித்த சிறிலங்காப் பாராளமன்றத்தினை ஈழத்தமிழர்களையும் உள்ளடக்கிய மக்களாட்சி அரசாங்கம் என உலகுக்கு காட்டி, ஈழத்தமிழர்களுக்குமான சட்ட அரசாகத் தன்னைப் போலியாக சிறிலங்கா வெளிப்படுத்தி வருகிறது.

இந்தச் சிறிலங்காப் பாராளுமன்றப் பெரும்பான்மைக் கொடுங்கோன்மையால், சிங்கள பௌத்த பேரினவாதத்தையே இலங்கை அரசாங்கத்தின் சட்டமாக்கும் சட்டவாக்கங்களும், பௌத்த மத பீடாதிபதிகள் அமுக்கக் குழுக்களாகச் செயற்பட்டு எதனையும் மாற்றும் வல்லமை அளிக்கும் சட்ட அமுலாக்கங்களும்,இன்றுவரை தொடர்வதால், சட்டத்தின் முன் தமிழர்களும் சிங்களவர்களும் சமம் என்ற பேச்சுக்கே இடமில்லாது சட்டஆட்சி இல்லாத மக்களாக ஈழத்தமிழர்கள் உள்ளனர்.

இதன் உச்சமாகச் சிறிலங்காப் படையினரே அரசநிர்வாகத்தின் பெரும்பாலான உயரதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள இன்றைய நிர்வாக முறைமையால் சிறிலங்கா கண்ணுக்குத் தெரியாத இராணுவ ஆட்சியைப் பாராளுமன்ற ஆட்சியாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

இதனால் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் உலகில் மனிதஇனத்தை அழிப்பது போலவே கண்ணுக்குத் தெரியாத இராணுவ ஆட்சி என்னும் கொரேனாவால் ஈழத்தமிழினம் கூட்டாக அழிக்கப்படும் பேரபாயம் எழுந்துள்ளது.

இந்த கண்ணுக்குத் தெரியாத இராணுவ ஆட்சி என்னும் கொரொனாவை விரைவாகவும் வலுவாகவும் பாராளுமன்ற ஆட்சி முறை மூலம் இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காகவே ஐக்கியநாடுகள் சபை ஈழத்தமிழர்களுக்கு வழங்கக் கூடிய அனைத்துப்பாதுகாப்புக்களையும் தடுக்கக் கூடிய முறையில் ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையகத்தின் வழிகாட்டல்களையும் நெறிப்படுத்தல்களையும் சிறிலங்கா வெளிப்படையாகவே உலகநாடுகளுக்கு எவ்வித அச்சமுமின்றி மீறி வருகிறது.

அத்துடன் இலங்கைத்தீவில் இனப்பிரச்சினையே இல்லை எனவும், அரசியல் அதிகாரப்பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், சிங்கள பௌத்த பேரினவாதிகளின் விருப்புக்கு எதிராக எந்த உரிமையும் தமிழர்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் வெளிப்படையாக சிறிலங்கா இலங்கையிலும், இந்தியாவிலும் ஐக்கியநாடுகள் சபை வரையிலும் பிரகடனப்படுத்தி வருகிறது.

இதனால் இந்தியப் பிரதமர் “ இலங்கைத் தமிழர்களின் கண்ணியத்தைப் பேணும் தீர்வு” ஒன்று வழங்கப்பட வேண்டும் என விடுத்த வேண்டுகோளைக் கூட சிறிலங்கா ஏறெடுத்தும் பார்க்காது விட்டுள்ளது. ஆயினும் இன்று படுகடன் நிலையில் வங்குரோத்து அரசாகத் தனது அரசு மாறுவதைப் பாதுகாக்குமாறு சிறிலங்கா இந்தியாவிடமே கையேந்தியுள்ளது. இவ்வாறு தன்னை அலட்சியம் செய்தாலும்,சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடை மீண்டுள்ள பனிப்போர் சூழலில், சீனாவுடனான இலங்கையின் உறவுகளில் தான் மேலாதிக்கம் செலுத்த நினைக்கும் இந்தியா சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை அளித்து அதனைப் படுகடன் நிலையிலிருது மீட்கக் கூடும் என்கிற ஊகம் பலமாக உள்ளது.

இதனால் ஊக்கமடைந்துள்ள சிறிலங்காவால் நடத்தப்படக்கூடிய சிறிலங்காவின் எந்தத் தேர்தலும் ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வைக் கூட்டாக அழிக்கும்,உலகின் கண்ணுக்குத் தெரியாத சிறிலங்கா இராணுவக் கொரோனாவை மேலும் மேலும் வளர்க்கும் சட்டத்தகுதிகளை உருவாக்க வல்லனவாகவே தொடரப்போகிறது. இதனால் யேர்மனியில் யூதஇனம் பாராளமன்ற முறை மூலம் தோன்றிய சர்வாதிகாரத்தாலேயே அழிக்கப்பட்டது போன்ற வரலாறு இலங்கையில் ஈழத்தமிழினத்திற்கு ஏற்படப்போகிறது.

இந்த உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தி இராணுவ ஆட்சி என்னும் கண்ணுக்குத் தெரியாத கொரோனாவால் ஈழத்தமிழ் மக்கள் கூட்டாகக் கொன்றழிக்கப்படும் அபாயத்திற்கு எதிராகவும்,உலகு அணிதிரள வேண்டும் என வலியுறுத்தும் பொறுப்பு உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களின் இன்றைய தலையாய கடமையாக உள்ளது.