‘கேள்விக்குள்ளான ஊடக சுதந்திரம்’ -யாழ். ஊடக மன்றம் கண்டனம்

இயற்கை வளங்களை அழித்தல் மற்றும் மரக்கடத்தல் போன்ற சட்ட விரோத. செயற்பாடுகளை அறிக்கையிடச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர்களான தவசீலன் மற்றும் குமணன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக யாழ். ஊடக மன்றம்  தெரிவித்துள்ளது.

இது குறித்து யாழ். ஊடக மன்றம்  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கோணாவில் முறிப்பு பிரதேசத்தில் இன்று (12.10.2020) சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு இரகசியமாக கடத்தப்படும் திருட்டு தொடர்பில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தும் முகமாக செய்தி சேகரிக்கச் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக யாழ் .ஊடக மன்றத்திற்கு அறியக் கிடைக்கின்றது.

பொதுமக்களுக்கு உண்மைகளை அறிக்கையிடும் பொறுப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸ் பிரிவில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் குறித்து அதிகாரிகள் அமைதியைக் கடைபிடிப்பது ஒரு சிக்கலான போக்காகும்.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது பணிகளை முனெடுத்துச் செல்லும் நிலைமை தொடர்வதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என வலியுறுத்தும் யாழ் ஊடக மன்றம் இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை நடத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு குறித்த பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து பெருமை பேசும் அரசாங்கம், ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்தவும், அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நீதி வழங்கவும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு சட்டத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் யாழ் ஊடக மன்றம் கோரிக்கையும் முன்வைக்கின்றது.

இனிவரும் காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க அரசும் பொறுப்பு வாய்ந்த அமைச்சுக்களும் ஊடக சுதந்திரம் குறித்து பொறுப்புக் கூறல் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.