கூட்டுக்களவாணிகள்: எண்ணிக்கைகளும் இது சார்ந்த அரசியலும்

என்னுடைய கருத்துப் பகிர்வுகளில் கோவிட்-19 குறித்த நோய்த்தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கைகளில், யாரும் உண்மையாக இல்லை, வெளிப்படையாக இல்லை. பகிரப்படும் எண்ணிக்கைகள் களநிலவரத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பதையும் தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்திருகின்றேன்.

சீனா பொய் சொல்லுகிறது என முழங்கும் ரம்பால், அமெரிக்கா கூட பொய் சொல்லவில்லை என்பதை நிலைநிறுத்த முடியாது. பலவேளைகளில் இவர்கள் அனைவரும் இன்றைய நிலையை எதிர்கொள்ளத்தக்க வகையில் தயாராக இருக்கவில்லை என்பது ஒரு காரணமாக அமைந்தாலும், அதையும் கடந்து பல்வேறு காரணங்களுக்காகவும் உண்மை எண்ணிக்கைகளை வெளியிடப் பல நாடுகளும் அதன் அரசியல் தலைமைகளும் தயாராக இல்லை என்பதுவும் உண்மை.

ஆகவே இந்தக் கூட்டுக்களவாணிகளைக் கடந்து உண்மையின் தரிசனப் பக்கங்களை ஆவணம் கொண்டு தொடர்ந்தும் இங்கு பார்க்கப்ப்போகின்றோம். எது எவ்வாறாயினும் பல உண்மைகள் காலம் கடந்தாயினும் வெளிப்பட்டுத் தானே ஆகவேண்டும்.

அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலம், அமெரிக்காவின் கோவிட்-19 நோய்த்தொற்று மற்றும் இறப்பின் மையப்புள்ளியாக உள்ளது. அமெரிக்காவின் 6 லட்சம் நோய்த் தொற்றில், 2 லட்சத்தையும், 26 ஆயிரம் இறப்பில் 10 ஆயிரத்திற்கு மேலும், அங்கேயே உள்ளது. இதிலும் நியூயோர்க் நகரமே நியூயோர்க் மாநிலத்திலும் முக்கிய மையப்புள்ளி. அங்கு இறப்பு 6589 ஆகவே உத்தியோக பூர்வமாக பதிவாகியிருந்தது. ஆனால் அதை நியூயோர்க் நகரத்தின் சுகாதாரத்துறை 3778 மேலதிக இறப்புக்களால் அதிரடியாக தற்போது அதிகரித்து, புதிய எண்ணிக்கையாக 10367 ஆக அறிவித்துள்ளது. அதாவது பழைய எண்ணிக்கையில் இருந்து 57 சதவீத அதிகரிப்பு. இது எவ்வாறு நடந்நதது என்பது தலையை சுற்றுகிறதா?

அதற்கான காரணம் இலகுவானது. அதாவது கோவிட்-19 நோய்த்தொற்றிற்கான சோதனைகள் செய்யப்படவில்லை, அதனால் நோய்த்தொற்று உண்டு என்று உறுதிப்படுத்தப்டவில்லை, ஆனால் இறந்து போன 3778 பேரில் கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாகவே இறந்ததிற்கான அதிக வாய்ப்புக்களும், அதற்கான அறிகுறிகளும் உண்டு என்ற வகையில், அதனால் இறந்தவர்கள் எண்ணிக்கையில் தற்போது சேர்த்துக் கொள்ளப்பட்டு, ஒரு புதிய கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் இன்னும் உத்தியோக பூர்வமாக கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதையும் இய்கு கவனத்தில் கொள்க. இங்கு தான் சவாலும் எழுகிறது. அதீத சாத்தியக்கூறுகள் உடையவர்கள் என்ற ரீதியிலேயே எண்ணிக்கை இவ்வாறு என்றால், அவ்வாறான நிலையை வெளிப்படுத்தும் வாய்ப்பையே இழந்து இறந்துபோனவர்கள் நிலை என்னாவது?

சாத்தியமுடையவர்கள் அனைவரும் ஆரம்பம் முதலே உரிய சோதனைகளுக்கு எவ்வித தங்குதடையுமின்றி உட்படுத்தப்பட்டிருந்தால், இந்நிலை எழுந்திராது? ஆனால் இந்நிலை அன்றைய நிலையிலும் பார்க்க குறைந்த நிலையில் என்றாவது, இன்றும் தொடர்வது கோவிட்-19 நோய்த்தொற்றின் மற்றும் இறப்பின் உண்மை எண்ணிக்கைகள் என்றும் வெளிவரும் சாத்தியமில்லை என்பதையும், தற்போதைய உத்தியோகபூர்வ எண்ணிக்கைகளை நோய்த்தொற்றில் 10 மடங்காலும், இறப்பு எண்ணிக்கையை குறைந்த பட்சம் 3 மடங்காலும், பார்ப்பது ஓரளவு பொருந்தும் என்பதே நிலை.

நன்றி: நேரு குணரட்னம்