கூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹக் செய்தது வடகொரியா – ஆதாரத்தை முன்வைத்த தென்கொரியா

இந்தியா தமிழ்நாடு திருநெல்வேலியிலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முக்கிய ஆவணங்களை திருடியது வடகொரியா தான் என்பதற்கான ஆதாரத்தை தென்கொரியா வெளியிட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகள் ஹக்கிங் செய்யப்பட்டு விட்டன. இதனால் இங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதல் வடகொரியா ஹக்கர்களால் தான் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இங்கு இரகசிய தகவல்களைத் திருடுவதற்காக டிடிராக் ரட் (D Track RAT) தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த வைரஸ்கள் பெரும்பாலான இடங்களில் பணமோசடி செய்யவே பயன்படுத்தப்படுகின்றது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதுபோல் ஒரு ஹக்கிங் நடக்கவில்லை என கூடங்குளம் அணுமின் நிலையம் விளக்கமளித்தாலும், இந்திய அணுசக்திக் கழகம் இதை ஒக்டோபர் 30ஆம் திகதி உறுதிப்படுத்தியது. இது குறித்து சைபர் புகார்களைக் கவனிக்கும் அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக கூறியது.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கணினிகளில் இருந்து ஹக்கிங் மூலம் தகவல்களை திருடியது வடகொரியா தான் என தென்கொரியா ஆதாரத்துடன் அடித்துக் கூறியுள்ளது. இது குறித்து issue makers lab என்ற சைபர் கிரைம் பாதுகாப்பு அமைப்பு தொடர் ருவிற்றுகளை வெளியிட்டுள்ளது.

இந்த திருட்டிற்கு பின்னால் தோரியம் குறித்த அணு மின் தகவல்களே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ருவிற்றரில் கூறுகையில், தோரியம் அணு ஆயுத தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி வகிக்கின்றது. கடந்த ஆண்டு முதல் இந்த தோரியத்தை மூலப் பொருளாக கொண்டு மின் உற்பத்தி செய்யும் முறையை திருட வடகொரியா முயற்சித்து வந்தது.

மேலும் அந்த ஆய்வு அமைப்பு கூறுகையில், கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபர் வடகொரியாவில் தயாரிக்கப்பட்ட கணினியைப் பயன்படுத்தியுள்ளார். மேலும் இந்த கணினிகள் வடகொரியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் ஹக்கரின் ஐபி முகவரி வடகொரிய தலைநகர் பியாங்யாங்கிலிருந்து வருகின்றது. ஹக்கர் குரூப் பி என்ற வைரஸை வடகொரியா பயன்படுத்துகின்றது. ஹக் செய்யப்பட்ட கணினியிலிருந்து கோப்புகளை வைரஸ் கம்ப்ரஸ் செய்ய  dkwero38oerA´t@# என்ற 16 இலக்க பாஸ்வேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாஸ்வேட்டைக் கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. டி டிராக் வைரஸின் கோடை வடகொரியா ஹக்கர்கள் பயன்படுத்தியது சரிபார்க்கப்பட்டது. இதே வைரஸ் தான் கடந்த 2016ஆம் ஆண்டு தென்கொரியா இராணுவ வலையமைப்புத் தொடர்பான தகவல்களை திருட பயன்படுத்தப்பட்டது என அடுக்கடுக்கான ஆதாரங்களை தென்கொரியா வைத்துள்ளது.