குரோனா வைரஸ் உயிரிழப்பு 800 ; 37,000 பேர் பாதிப்பு

கு ரோனா வைரஸ் பலி எண்ணிக்கை சீனாவில் ஞாயிறன்று கணக்கின் படி 803 ஆக அதிகரித்துள்ளது, வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,000 பேர்களாக அதிகரிப்பு.

சார்ஸ் வைரஸ் பலியைக் காட்டிலும் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா பீறிட்ட மையமான ஹூபேயில் மேலும் 81 பேர் மரணமடைந்துள்ளனர். சார்ஸ் வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 774, கரோனா பலி எண்ணிக்கை 803 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த டிசம்பரில் ஹூபே மாகாணத்தில் உள்ள சந்தை ஒன்றில் காட்டு விலங்குகள் இறைச்சி விற்கப்பட்டது, இதிலிருந்து இந்த கரோனா வைரஸ் பரவி தற்போது உயிரைக் குடித்து வருகிறது, இந்த வைரஸ் பற்றி முதன் முதலில் அறிவித்த மருத்துவரை சீனா அடக்கியது, கடைசியில் அவரே வைரசுக்குப் பலியாக மக்கள் கோபம் சீன அரசு மீது அதிகரித்து வருகிறது.

மேலும் வூஹானில் 60 வயது அமெரிக்கரும் கரோனாவுக்குப் பலியானதாக நேற்று செய்திகள் வெளியானதும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் ஜப்பானிய நபர் ஒருவரும் கரோனாவுக்கு வூஹான் மருத்துவமனையில் பலியானதாகக் கூறப்படுகிறது.

கரோனா பாதிப்பினால் யாரும் அங்கு செல்ல முடியாததாலும் சீனாவிலிருந்து பொருட்கள் வெளியே செல்வதிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் சீன பொருளாதாரம் பின்னடைவு கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் 33 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்ததையடுத்து அங்கும் கடைக்காரர்கள் கடைகளை மூடிவிட்டுச் சென்றனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் முகமூடிகளுக்கும் சீனாவில் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.