குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டது உண்மை- காவல்துறையினருக்கு கள நிலையை நேரடியாக காண்பித்த ரவிகரன்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் உண்மையானது என்பதனை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்   காவல்துறையினருக்கு நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளார்.

குருந்தூர்மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு   அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் ரவிகரன், முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்திருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்த வேண்டுமென காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையிலேயே அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளம் காணாமல் ஆக்கப்பட்டமை உண்மை என கள நிலமைகளை நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளார் ரவிகரன்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குருந்தூர்மலையில் இருந்த சூலம் உட்பட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டதுடன், அங்கு தமிழ் மக்கள் சென்று வழிபடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில்,  ரவிகரன் முல்லைத்தீவு – காவல்  நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்திருந்தார். அத்தோடு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் இருந்த இடத்தில் நிறுவப்பட வேண்டும் எனவும், தமிழ் மக்கள் குருந்தூர்மலைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ரவிகரன் குறித்த முறைப்பாட்டினூடாகக் கோரியிருந்தார்.

மேலும் காவல்துறையினரோடு,  துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் குருந்தூர் மலைக்குச் சென்று அங்கு தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதை காவல்துறையினருக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குருந்தூர்மலைப் பகுதிக்குள் முறைப்பாட்டாளரான ரவிகரன் மற்றும் அவருடன் மேலும் ஒருவர் மாத்திரமே செல்ல காவல்துறையினர் அனுமதித்ததுடன்,  ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.