குடும்பத் தகவல்களைச் சேகரிக்கும் பொலிஸ் – அச்சத்தில் இஸ்லாமியர்கள்

ஜம்முவில் இஸ்லாமிய குடும்பங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும்  செயற்பாட்டுக்கு கடும்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து அந் நடவடிக்கையை போலீஸார் நிறுத்தியுள்ளனர்.

ஜம்முவின், பதிண்டி மற்றும் சுன்ஜ்வானில் ஆகியவை இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் வாடகைக்கு வசிப்பவர்களின் விவரங்களை பொலிஸார் சேகரித்தது மட்டுமல்லாமல், வீட்டு உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்களையும் சேகரித்துள்ளனர்.

உள்ளூர்வாசிகள் கூறுகையில், ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் பொலிஸார் இரண்டு படிவங்களை வழங்கியுள்ளனர். ஒரு படிவம் வாடகைக்கு வசிப்பவர்கள் பற்றிய விவரங்களைக் கேட்டுள்ளது. மற்றொரு படிவம் வீட்டு உரிமையாளர்களின் குடும்பத்தை பற்றிய முழுமையான விவரங்களைக் கேட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை, அங்குள்ளவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் உயர் அதிகாரி முகேஷ் சிங், “இதனை கவனத்தில் கொண்டுள்ளேன். குடியிருப்போர் விவரங்களை சரிபார்க்க ஜம்மு மாவட்டம் முழுவதும் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எங்கள் கடமை. ஜம்மு மாவட்ட மூத்த எஸ்பி-க்கு உடனடியாக இந்தப் படிவத்தின் வடிவமைப்பைச் சரிசெய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

இந்நிலையில்,குடியிருப்பவர்களின் விவரத்துடன் உரிமையாளர்களின் குடும்பத்தைப் பற்றிய விவரங்களை சேகரிப்பது இதுவே முதல்முறை என்று வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்கறிஞர் ஷேக் ஷகீல் அகமது தெரிவித்துள்ளதாக  தி வயர் இணையதளம் வெளியிட்ட செய்தியில், “தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் இது நடைபெற்றதா? அல்லது மாவட்டம் முழுவதிலுமிருந்து இந்தத் தகவல் கோரப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து ஆராய்ந்தபோது சில பகுதிகளில் மட்டும் நடைபெற்றது என்பது தெரியவந்தது. மக்கள் தங்கள் வீடுகளின் ஜிபிஎஸ் இருப்பிடத்தை சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட்டனர். இது எங்கும் நடைபெறாத ஒன்று.

மேலும் சிவில் சமூக உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டங்களைத்தொடர்ந்து  குடும்பங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையைக்  பொலிஸ் நிறுத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.