“இலங்கையில் கருத்துச் சுதந்திரம் இல்லை” -க.வி.விக்னேஸ்வரன்

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால்  முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009ஆம் ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது.  அதற்குப் பின் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசாக உலகின் கவனத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முனைகிறது.

அவ்வாறான சலுகைகளில் ஒன்றுதான் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நினைவு கூரல் அனுமதிகள். ஆனால் தற்போது  அதற்கு எதிராக தடையுத்தரவுகளை இலங்கை அரசாங்கம் விதித்து வருகின்றது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில்  ‘இலக்கு மின்னிதழ்’ கண்ட நேர்காணலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன், “இலங்கையில் கருத்துச் சுதந்திரம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை  அரசின் மனித உரிமை மீறலை, எமக்குச் சாதகமாக எதிர் கொள்ள வேண்டும். இலங்கையில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்பதை வெளிநாடுகளில் வலியுறுத்த வேண்டும். இவை பற்றி எமது நாட்டின் இராஜதந்திர பிரதிநிதிகளிடம், வெளிநாட்டு அரசாங்கங்கள் கேள்வி கேட்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவற்றைக் கொண்டு கண்டிக்கச் செய்ய வேண்டும். அவ்வாறே ஐக்கிய நாடுகளும் எம் நாட்டு அரசாங்கத்தை விமர்சிக்க வைக்க வேண்டும்.

எமக்கு அடக்கு முறைக்கெதிராகப் போராடும் உரிமை உள்ளது. நாம் தனித்துவமான இனம், எமது உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் கூட்டம், அடக்கு முறைகளை எதிர்க்கும் இந் நாட்டின் ஆதிக் குடி மக்களின் வழி வந்தவர்கள் என்று தானே நாம் உரக்கக் கூறி வருகின்றோம்.” என்று கூறியுள்ளார்.