குடியரசு தலைவரின் ஒப்புதலின்றி மாநில அரசே எழுவரை விடுதலை செய்யலாம்  – கி வீரமணி

குடியரசுத் தலைவர் அளவுக்கு செல்லாமலேயே பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை மாநில அரசே விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது. அந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எழுவரை அரசியல் அமைப்பு சட்டத்தின் 161ம் பிரிவின் கீழ் முந்தைய அரசு விடுதலை செய்திருந்தால், இத்தனை காலதாமதமும், குழப்பங்களும் ஏற்பட்டிருக்காது.

இது தொடர்பாக அரசியல் அமைப்பு சட்டத்தின் 161ம் பிரிவு மாநில அரசுக்கு விரிவான அதிகாரத்தை வழங்கியுள்ளது.

எழுவர் விடுதலை தொடர்பாக பற்பல காலகட்டங்களில் காரணங்களும், சாக்குபோக்குகளும் கூறப்பட்டது.  பேரறிவாளனை விடுதலை செய்வதில் எங்களுக்கு மறுப்பு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் குடியரசு தலைவரிடமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக ஆளுநர் ஏற்படுத்திய தடையின் காரணமாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது முறையான நடவடிக்கை.

அரசியல் அமைப்பு சட்டத்தின் 161ம் பிரிவின் படி அமைச்சரவை மீண்டும் முடிவெடுத்து எழுவரை விடுதலை செய்ய தாராளமாக இடம் உண்டு.  அது சட்டப்படி சரியான நடவடிக்கையாக அமையும்” என்றார்.

மேலும் 1996ம் ஆண்டு அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுவிக்க கலைஞர் தலைமையிலான அரசு முடிவெடுத்ததையும், ஆளுநர் அதனை திருப்பி அனுப்பிய போது அரசியல் அமைப்பு சட்டத்தின் 161ம் பிரிவின் கீழ் கலைஞர் அரசு அவர்களை விடுவித்ததையும் கி.வீரமணி சுட்டிக்காட்டியுள்ளார்.