கீழடி அருகே மணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு

சிவகங்கை  மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் நடைபெறும் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஆரம்பமாகிய போது, கீழடி அருகிலுள்ள மணலூரில் தொன்மையான வட்ட வடிவ உலைகலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி 40 இலட்சம் ரூபா செலவில் தொல்லியல்துறை இணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது. இருந்தும் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்பணிகள் மார்ச் 24ஆம் திகதி நிறுத்தப்பட்டன. மீண்டும் மே 20இல் கீழடி, அகரம் ஆகிய பகுதிகளில் அகழ்வுப் பணிகள் தொடங்கின.

இதற்கமைவாக கீழடி அருகில் உள்ள மணலூரில் தெரிவு செய்யப்பட்ட 2 ஏக்கர் நிலப்பதியில் அகழ்வுப் பணிகள் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வந்தன. நேற்று மணலூரில் உள்ள ஒரு குழியில் உலைகலன் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒன்றரை அடி விட்டத்துடன் வட்ட வடிவில் கிடைத்துள்ளது. ஒற்றை செங்கற்களால் கட்டப்பட்ட இந்த உறைகலனானது உலோகங்களை உருக்கி ஆபரணங்கள் செய்வது உள்ளிட்ட மற்றப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். முழுமையாக அகழப்பட்டாலேயே இதன் முழு விபரமும் தெரியவரும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை வட்ட வடிவ உறை கிணறுகள் மட்டும் கிடைத்துள்ள நிலையில் தொழில் நகரமாக அறியப்படக்கூடிய ஆதாரம் கிடைத்திருப்பது தொல்லியல் துறையினரிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழடியில் விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்களும், கொந்தகையில் முதுமக்கள் தாழிகளும் அதிகளவில் கிடைத்ததால், இடுகாடாக இருக்க வாய்ப்புண்டு என கருதப்பட்டது. அத்துடன் மணலூர் தொழில் நகரமாக இருக்க வாய்ப்புள்ளது என இந்த உலைகலன் கண்டுபிடிப்பின் மூலம் அறிய முடிகிறது.