கிழக்குக்கான தொல்பொருள் செயலணியில் அனைவரும் சிங்களவர்; சிறுபான்மையினருக்கு இடமில்லை

கிழக்கில் தொல்பொருள் முகாமைத்துவம் குறித்த ஜனாதிபதி செயலணியில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விபரங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய வர்த்தக பிரமுகரும் தனியார் ஊடகநிறுவனமொன்றின் தலைவருமான டிலித் ஜயவீரவின் பெயர் இந்த வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கிற்கான தொல்பொருள் முகாமைத்துவ ஜனாதிபதி செயலணியில் தமிழர் ஒருவர் கூட இணைத்துக்கொள்ளப்படாதமை குறிப்பிடத்தக்கது.

எல்லாவல மேதானந்த தேரர், பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண,தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் செனெரத் பண்டார திசநாயக்க மேல்மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்,காணி ஆணையாளர் நாயகம் உட்பட உட்பட பத்து பேர் இந்த செயலணியில் இடம்பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காணுவது,அந்த இடங்களை நிர்வகிப்பதற்கான உரிய திட்டத்தினை முன்வைப்பது ஆகிய பணிகள் இந்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிற்கு ஒதுக்கப்படவேண்டிய நிலத்தின் அளவினை தீர்மானிக்கும் பொறுப்பும்,அந்த நிலங்களை சட்டரீதியில் ஒதுக்குவதற்கான பொறுப்பும் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.