கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள்;படையினர் தொல்பொருளியல் திணைக்களம் ஒத்துழைப்பு-PEARL அமைப்பு

கிழக்கு மாகாணத்தில் சிறீலங்கா அரசின் ஆதரவுடன் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு சிறீலங்கா படையினர், தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர் என அமெரிக்காவின் வெசிங்டனைத் தளமாகக் கொண்ட சிறீலங்காவில் சமத்துவமும், நிம்மதிக்குமான மக்கள் அமைப்பு (People for Equality and Relief in Lanka – PEARL)  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரச தலைவர் அண்மையில் அமைத்துள்ள இரண்டு நடவடிக்கை படை பிரிவுகள் அங்கு இராணுவ ஆட்சி வலுப்பெற்றுவருவதை எடுத்துக் காட்டுகின்றன.

சிறீலங்கா அரச தலைவரின் இந்த நடவடிக்கை கடுமையான கண்டனத்திற்குரியது. இது அங்கு ஒரு சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். தேசிய பாதுகாப்பு, கொரோனா வைரஸ் நெருக்கடி, அரச அதிகாரங்கள் ஆகியவற்றில் அதிகளவு படைத்துறை நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் இது ராஜபக்சா அரசின் அதிகாரத்தை பலப்படுத்தலாம். ஆனால் சிறீலங்கா அரசின் இராணுவமயப்படுத்தலை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் சிறீலங்காவின் பழைய வரலாறு அங்கு மீண்டும் திரும்பலாம்.

புதிதாக அமைக்கப்பட்ட இரு நடவடிக்கை படையணியிலும், பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள் மேலும் போர்க்குற்றவாளிகளும் அதில் நியமனம்பெற்றுள்ளனர். இந்த நியமனம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளிடம் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இந்த நடவடிக்கை குழுவினர் புலம்பெயர் தமிழ் மக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.