கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுட்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உயிர்த்த ஞாயிறு தினத்தை தங்களது வீடுகளின் இருந்து அனுட்டிக்குமாறு கிறிஸ்தவ மக்களிடம், கிறிஸ்தவ மதகுருமார்கள் கோரியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக கிறிஸ்தவ மக்களுக்கும், நாட்டிலுள்ள ஏனைய மக்களுக்கும் சவால் நிலை ஏற்பட்டுள்ளதாக பேராயார் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

நாட்டு மக்கள் என்ற ரீதியில் பிரிவினை மற்றும் தவறான புரிந்துணர்வுகளை விடுத்து சிறந்த வாழ்க்கை முறையினை ஏற்படுத்த வேண்டும்.

இந்த முறை உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளை வீட்டில் இருந்தவாரே அனுட்டிக்கவும்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் சகலரினதும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

அதனை முழுமையாக ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகவே எந்தவொரு மதத்தினை பிற்பற்றுவராக இருப்பினும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்று பட்டு இந்த வைரஸ் தொற்றினை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என பேராயார் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

இதேவேளை, தற்போது கொரோனா வைரஸ் பரவுவதுடன் உலக மக்கள் முகம்கொடுத்துள்ள பாரிய அனர்த்தம் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடும், மக்களும் சவால் மிகுந்த சுகாதார அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினதும் சுகாதார அதிகாரிகளினதும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப வீடுகளில் இருந்து இயேசு கிறிஸ்துவுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்றம் தாக்குதலின் துன்பியல் நினைவுகள், நாட்டு மக்களின் நினைவுகளில் இருந்து நீங்காது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் இடம்பெறாமல், தாய்நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில், அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் உள்ளதாக, உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு உலகமும் தற்போது வைரஸ் தொற்றினால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டு மக்கள் தேவாலயங்களுக்கு செல்லாமல், வீடுகளிலேயே தங்களின் சமய வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.