காயத்ரி மந்திரம் கொரோனாவை ஒழிக்க உதவுமா- ஆய்வில் இறங்கி ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை

காயத்ரி மந்திரம் மற்றும் மூச்சுப் பயிற்சி கொரோனா சிகிச்சையில் உதவுமா என்பது குறித்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்த ஆய்வுக்கு இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்திருக்கிறது. மேலும், இந்த ஆய்வை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலில் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவத் துறை பேராசிரியர் மருத்துவர் ருச்சி துவா ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, “காயத்ரி மந்திரம், பிராணயாமம் பயிற்சிகள் மேற்கொண்டோருக்கு உடல் சோர்வு குறைந்திருக்கிறதா? மனப்பதற்றம் நீங்கியிருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த முயற்சியில் யோகா குறித்து ஆராய்ச்சி செய்வோரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சி ரியாக்டிவ் புரதம் மூலம் நுரையீரலில் உள்ள அழற்சி எவ்வாறு குறைகிறது என்பதை ஆய்வு செய்வோம். அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்றார்.

மேலும், இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ரூ.3 இலட்சம் உதவி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.