காத்தான்குடியை தனிமைப்படுத்தக் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியை ஐந்து நாட்கள் தனிமைப் படுத்துவதற்கான பரிந்துரையினை தேசிய கொரோனா செயலணிக்கு அனுப்பியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

காத்தான்குடியை சேர்ந்த ஐம்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பெரியகல்லாறில் எந்தவித அதிகரிப்பும் இதுவரையில் காணப்படவில்லையெனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவினை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தல் பகுதியாக வைத்திருப்பதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதனை உடனடியாக தேசிய கொரோனா செயலணிக்கு சிபார்சு செய்துள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று நோயாளர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சுயமாக சிந்தித்து சுயமாக சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும். புதுவருட கொண்டாட்டங்களில் மிகவம் கவனமாக ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

காத்தான்குடியில் 665பேருக்கு இன்று மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதனைப்போன்று மட்டக்களப்பு காந்திபூங்காவிலும் 550பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் மொத்தமாக 59பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். இவர்களில் 50 பேர் காத்தான்குடியை சேர்ந்தவர்களாகும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மருந்தகம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையம் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் நாளை முழுநாளும் மூடப்படுவதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

31ஆம் திகதி புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தொற்று பரவால் இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றது.

இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கவேண்டிய தேவையுள்ளது.அவர்களுக்கு உதவிசெய்யும் வகையிலும் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டியுள்ளது.

காத்தான்குடி-மட்டக்களப்பு மாநகரசபை எல்லையினையும் ஐந்து நாட்களுக்கு மூடி அப்பகுதியில் பரிசோதனைகள் முன்னெடுக்கப் படவுள்ளது. அதற்கு பின்னர் கொரோனா செயலணி கூடி ஒரு முடிவினை எடுக்கும்.

அதனை தொடர்ந்து எதிர்வரும் 01ஆம் திகதி முதல் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்படும் வியாபார நிலையங்களுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கையினை எடுப்போம்.” என்று கூறியுள்ளார்.