முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல் சட்டத்தரணி ஊடாகப் முன்னிலையாவதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பசில் ராஜபக்ச, தாம் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நீண்ட நேர விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்து நீதிமன்றத்தில் மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
இதற்கு மாற்றாக காணொளி தொழில்நுட்பம் ஊடாக சாட்சியமளிக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி இக்கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி மூலம் முன்னிலையாவதற்கு அனுமதி கோருவதற்குத் தேவையான விசேட அல்லது விதிவிலக்கான சூழ்நிலை நிலவுவதை உறுதிப்படுத்தும் எந்தவொரு தகுந்த சான்றுகளையும் பிரதிவாதி தரப்பு சமர்ப்பிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கோரிக்கையை நியாயப்படுத்த முன்வைக்கப்பட்ட காரணங்கள் போதுமானதாக இல்லை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்த நீதவான், பசில் ராஜபக்சவின் மனுவை நிராகரித்து மீண்டும் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.
மாத்தறை, எளியகந்த பகுதியில் அமைந்துள்ள பெறுமதிமிக்க காணியை ரூபாய் 50 மில்லியனுக்குக் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணையே இவ்வழக்கின் அடிப்படையாகும்.
குறித்த சொத்தைக் கொள்வனவு செய்வதற்காகப் பயன்படுத்திய நிதியை ஈட்டிய முறையை வெளிப்படுத்தத் தவறியமையால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் முதித ஜயகொடி மற்றும் திஸ்ஸ கலாபதி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
அத்தோடு தற்போது கனடாவில் வசித்து வரும் அயோமா கலாபதியின் பெயரிலேயே குறித்த சொத்தின் உறுதிப்பத்திரம் பதிவாகியுள்ளது.
அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் கோரியதையடுத்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக ஏப்ரல் 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



