ஒற்றையாட்சி அரசமைப்பு என்ற சதியை முறியடிப்பதற்கு மக்களை அணிதிரட்டுவோம்; கஜேந்திரகுமார்

“எமது உரிமைகைளை அனுபவிக்கக்கூடிய வகையில் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளம் பகுதிக்கு விஜயம் செய்த அவர் அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியிருப்பதாவது;

“தாயக நிலப்பரப்பிலே பல மாவட்டங்கள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. வன்னி மாவட்டத்தையும் அந்த நிலைக்கு கொண்டு செல்கின்றார்கள். எனவே இந்த தேர்தலுக்கு பின்னர் வரக்கூடிய நிலைமையை தொடர்பாக நாம் ஆராயவேண்டும்.

இன்று புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படவிருக்கின்றது. அது ஒரு ஒற்றையாட்சியாக இருக்கப்போகின்றது. அதனை ஆதரிக்கப்போவ தாகக் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருக்கின்றது. ஒற்றுமை என்ற கோசத்தை விக்கினேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளார்.இவர்கள் அனைவரும் இணைந்து தமிழ் மக்கள் தாங்களாகவே விரும்பி ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்றுக்கொள்ளதயாராக இருப்பதாக உலகிற்குக் காட்ட முனையும் செய்தியை நாம் முறியடிக்கவேண்டும்.

அந்த புதிய அரசமைப்பானது சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் வடக்குகிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஏகோபித்த எதிர்ப்பை நிலைநாட்டியே ஆகவேண்டும். எனவே ஒற்றையாட்சி அரசமைப்பு என்ற சதியை முறியடிப்பதற்கு மக்களை அணிதிரட்டி கட்டமைக்கும் பணிகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம்.

யாழில் மாத்திரமின்றி ஏனையமாவட்ங்களிலும் அதனை முன்னெடுப்பதற்காக எமது கட்சியைச் சேர்ந்த கஜேந்திரனுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கியிருந்தோம்” என்றார்.