ஒருங்கிணைப்பு கூட்டங்களில் அழைப்பில்லை-விவசாய சம்மேளனம் அதிருப்தி

வவுனியாவில் இடம்பெறும் பிரதேசமட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டங்களில் கலந்து கொள்வதற்கு விவசாய துறைசார்ந்த பிரதிநிதிகளிற்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்று மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் சேதுகாவலர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘வவுனியாவில் பிரதேச மட்டங்களில் இடம்பெறும் அபிவிருத்தி குழு கூட்டங்களில் விவசாய பிரதிநிதிகளிற்கு அழைப்பு விடுக்கப்படாமையினால் அவர்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியாவை பொறுத்தவரை விவசாய செய்கையை பிரதானமாக கொண்ட மக்களே அதிகம் வாழ்கின்றார்கள். அதேபோல அந்த துறைசார்ந்த பிரச்சனைகளும் இங்கு ஏராளம் உள்ளது. குளங்கள் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. எனவே அவற்றை வெளிப்படுத்தி அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் எமக்கு ஏற்ப்படுத்தி தரப்பட வேண்டும்.
இம்முறை வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு மாத்திரமே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. செட்டிகுளம் மற்றும் நெடுங்கேணியில்  இடம்பெற்ற பிரதேசமட்ட கூட்டங்களிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக மாவட்டமட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்களிற்கும் அழைப்பு விடுக்கப்படாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிப்படுத்தி அதனை தீர்ப்பதற்கு மாவட்ட விவசாய சம்மேளனத்திற்கோ அல்லது விவசாயிகள் சார்ந்த பிரதிநிகளிற்கோ அபிவிருத்தி கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி தரவேண்டும்’ என்றார்.