ஐ.நா தீர்மானமும் போக்கிரித்தன கணக்கு வழிகொண்ட அரசாங்கத்தின் போக்கும் – பி.மாணிக்கவாசகம்

பொறுப்பு கூறும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46-1 பிரேணை தமிழ் மக்களை ஏமாற்றியிருப்பதாகக் கூறப்படுகின்ற அதேவேளை, அரசாங்கமும் அதனை தேவையற்ற ஒன்று என நிராகரித்திருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச  மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்புகூற வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உறுதியான கோரிக்கை.

தமிழ் மக்களின் நீதிக்கான இந்த கோரிக்கை – ஏக்கம் – 12 வருடங்களாக தொடர்கின்றது. சிறீலங்காவைப் பொறுப்புகூறச் செய்வதற்காக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இதுவரை 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 2012 மார்ச் மாதம் 22 ஆம் திகதிய 19-2 ஆம் இலக்கம் கொண்ட தீர்மானம், 2013 மார்ச் மாதம் 21 ஆம் திகதிய 22-1 ஆம் இலக்கத்தைக் கொண்ட தீர்மானம், 2014 மார்ச் மாதம் 27 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 25-1 ஆம் இலக்கத் தீர்மானம், 2015 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கொண்டு வரப்பட்டட 30-1 ஆம் இலக்கத் தீர்மானம், 2017 மார்ச் மாதம் 23 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட 34-1 ஆம் இலக்கத் தீர்மானம், அதன் பின்னர் 2019 மார்ச் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 40-1 ஆம் இலக்கத் தீர்மானம் ஆகிய இந்த 6 தீர்மானங்களினாலும் சிறீலங்காவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

ஏழாவதாக வந்துள்ள 46-1 பிரேரணை முன்னையவற்றைப் போலவே பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை அரசாங்கத்திடமே விட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு வழமைபோலவே கால அவகாசமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு அம்சங்களுமே தமிழ்த்தரப்பினருடைய அதிருப்திக்குக் காரணமானவையாக இருக்கின்றன.

அதேவேளை  தமிழ்த்தரப்பினால் கோரப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்லது சர்வதேச  தீர்ப்பாயம் என்ற விசாரணை பொறி முறையின் கீழ் அரசாங்கம் பொறுப்புக் கூறலை நிறைவேற்ற வேண்டும். அதன் ஊடாக போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தங்களுக்கு நியாயமும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதும் தமிழ்த்தரப்பின் முக்கிய கோரிக்கையாகும்.

ஐ.நாவின் பொறுப்பில் இருந்து அரசாங்கத்தின் பொறுப்பு கூறுகின்ற கடப்பாடு சர்வதேச பொது நிலையில் – பொதுப் பொறிமுறைக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரேரணையில் உள்ளடக்கப்படவில்லை.

இது தமிழ்த்தரப்பை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றது. அதனால் தமிழ்தரப்பில் சிலர் இந்தப் பிரேரணையை ஏற்க முடியாது என்று நிராகரித்திருப்பதைக் காண முடிகின்றது. அது மட்டுமல்லாமல் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தன்னியல்பு சார்ந்த பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து தமது கண்டனங்களையும் கடுந்தொனியில் வெளியிட்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அரசாங்கமும் இந்தப் பிரேரணை குறித்து கடும் வார்த்தைப் பிரயோகத்தில் தனது அதிருப்தியையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றது. மனித உரிமைகள் எதுவுமே மீறப்பட வில்லை. போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. மனிதாபிமான இராணுவ நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது. படைத்தரப்பின் இந்த நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளே கொல்லப்பட்டனர். பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொல்லவில்லை என்று அரசாங்கம் மறுத்துரைத்திருக்கின்றது. அத்துடன் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வர முயன்ற பொது மக்களை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றார்கள் என்றும் அரசு குற்றம் சாட்டியிருக்கின்றது.

அரசாங்கம் மனித உரிமைகளை மீறியிருக்கின்றது என குற்றம் சுமத்துபவர்கள் ஏன் விடுதலப்புலிகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து பேசவில்லை? அது விடயத்தில் அவர்கள் ஏன் மௌனம் சாதித்திருக்கின்றார்கள்? என்று எரிச்சலுடன் அரசு கேள்விகளை எழுப்பி இருக்கின்றது.

“சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை. உள்ளகப் பொறிமுறையின் ஊடாகவே விசாரணைகளை மேற்கொள்வோம். விடுதலைப்புலிகளின் பயங்கரவாதப் பிடியில் இருந்து மூன்று லட்சம் பொதுமக்களை மனிதாபிமான ரீதியில் பாதுகாத்து உயிர்வாழச் செய்த இராணுவத்தின் சேவையை மறந்துவிடக் கூடாது” என அரசு கூறியிருக்கின்றது.

 “இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை சிலர் விரும்பவில்லை. அந்த விருப்பமின்னையின் வெளிப்பாடே 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மனித உரிமைப் பேரவையின் பிரேரணைகளாக வெளி வந்திருந்தன” என சுட்டிக்காட்டியுள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, “ரணில் – மைத்திரிபால கூட்டு அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பிரேரணையில் இருந்து நாங்கள் விலகிவிட்டோம்” என கூறியுள்ளார்.

 “அந்தப் பிரேரணை நாட்டின் இறையாண்மைக்கு முரணானது. நல்லிணக்கத்திற்கு விரோதமானது. அரசியல் அமைப்புக்கு மாறானது. அது பல்வேறு நாடுகளிடமிருந்து சிறீலங்காவை துருவப்படுத்தும் செயற்பாட்டைக் கொண்டது. நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது. இராணுவத்துக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுக்கக் கூடியது. சிறீலங்காவின் நீதிப்பொறிமுறை சுயாதீனமானது. அதில் தலையிடவல்ல எந்தவொரு வெளிநாட்டு நீதிப்பொறிமுறையையும் அனுமதிக்க முடியாது” என்ற காரணங்களுக்காகவே அந்தப் பிரேரணையை கோத்தாபாய அரசு அந்தப் பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகியதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

download ஐ.நா தீர்மானமும் போக்கிரித்தன கணக்கு வழிகொண்ட அரசாங்கத்தின் போக்கும் - பி.மாணிக்கவாசகம்

 

ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணைக்கான இணை அனுசரணையில் இருந்து  விலகியமைக்காக அவர் வெளியிட்டுள்ள காரணங்கள் உப்புச்சப்பற்றவையாகவே காணப்படுகின்றன. உள்ளக நீதிப்பொறிமுறையின் ஊடாக சர்வதேசமும், தமிழ் மக்களும் நம்பிக்கை கொள்ளத்தக்க வகையிலான விசாரணைகளை நடத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என்பதையே இந்தக் காரணங்கள் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கின்றன.

தற்போது ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46-1 பிரேரணைக்கு 22 நாடுகள் ஆதரவளித்திருக்கின்றன. 11 நாடுகள் எதிர்த்திருக்கின்றன. இது பிரேரணைக்குக் கிடைத்துள்ள பெரும்பான்மை ஆதரவு என்பதை வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தினேஷ் குணவர்தன நிராகரித்திருக்கின்றார்.

பேரவையின் மொத்த உறுப்பினர்களாகிய 47 நாடுகளில் பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகளைவிட 14 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன. இவ்வாறு வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகியிருந்த நாடுகளும் சிறீலங்காவிற்கு ஆதரவளித்திருப்பதாகவே தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

 “ஒட்டுமொத்தமாக இந்தப் பிரேரணைக்கு பெரும்பான்மை ஆதரவில்லை” என்று அவர் அறதியிட்டுக் கூறியிருக்கின்றார். அவருடைய இந்தப் பெரும்பான்மை பற்றிய கணக்கு நாட்டு மக்களை ஏளனச் சிரிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

 “இந்தப் பிரேரணை பக்கச்சார்பானது. இதன் பின்னணியில் அரசியல் நகர்வுகள் இருக்கின்றன. ஆகவே நாங்கள் இந்தப் பிரேரணையை முற்றாக நிராகரிக்கின்றோம்” என்று அவர் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

உண்மையில் இந்தப் பிரேரணையின்மூலம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு நேர்மையான சர்வதேச தரத்துக்கு அமைவான விசாரணைகளை நடத்தி அதன் ஊடாகத் தனது பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஐ.நா மனித உரிமைப் பேரவை வழங்கி இருக்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தை அரசு தவறவிடுமேயானால், பொறுப்பு கூறலுக்கான விசாரணைகளும், போர்க்குற்றங்களுக்கான நீதி விசாரணைகளும் சிறீலங்காவிடமிருந்து கைநழுவிப் போய்விடும் என்ற இந்தப் பிரேரணையின் உட்கிடக்கையை – யதார்த்தத்தை அரசு உணர மறுத்திருக்கின்றது. போக்கிரித்தனமான தனது கணக்கு வழியில் இந்தப் பிரேரணைக்குப் பெரும்பான்மை ஆதரவு கிட்டவில்லை எனக் கூறியுள்ள தினேஷ் குணவர்தனவுக்கு வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் நாட்டுக்கு ஏற்படவுள்ள ஆபத்தான நிலைமைகளை உணர முடியாமல் போயிருப்பதில் வியப்பில்லை.

போர்க்குற்றச் செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டி, பாதுகாப்பாகக் களஞ்சியப்படுத்த வேண்டும் என்பது இந்தப் பிரேரணையின் மிக முக்கியமான உள்ளடக்க அம்சமாகும். இந்தப் பொறுப்பை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் பொறுப்பேற்றுச் செயற்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்து, அதற்கான ஆளணி மற்றும் இதர செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடும் வசதிகளும் செய்யப்பட வேண்டும் என இந்தத் தீர்மானம் கூறியிருக்கின்றது.

இவ்வாறு உரிமை மீறல்கள் போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பிலான ஆவணங்களை ஐ.நா மன்றத்தின் பிரதான பிரிவுப் பொறிமுறையின் ஊடாகத் திரட்டி பாதுகாத்தல் என்பது சிறீலங்கா அரசாங்கத்தின் கழுத்தைச் சுற்றிய பாம்பாகும்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் திரட்டிப் பாதுகாக்கப்படுகின்ற ஆதாரங்கள், ஆவணங்கள் என்பவற்றை சிறீலங்காவிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை அல்லது மனித உரிமை மீறல்களை முன்வைத்து, பேரவையின் எந்தவொரு உறுப்பு நாடும் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரேரணையில் கூறப்பட்டிருக்கின்றது.

இது உடனடியாகவோ அல்லது காலம் கடந்த நிலையிலோ சிறீலங்கா அரசின் தலைமீது தொங்கிக் கொண்டிருக்கின்ற கூரிய கத்தியாகவே அமையும். அந்தக் கத்தியை எந்த  வேளையிலும் எத்தகையதொரு தருணத்திலும் மனித உரிமைகள் மீது பற்றுகொண்டுள்ள எந்த நாடும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது இந்தப் பிரேரணையின் அடிநாதமாகும்.

சுருக்கமாகக் கூறுவதானால், சிறீலங்கா அரசு உள்ளக விசாரணைகளையோ, கலப்புப் பொறிமுறை சார்ந்த விசாரணைகளையோ அல்லது ஐ.நாவின் உதவியுடனான சர்வதேச விசாரணைகளையோ – ஏதேனும் விசாரணைகளின் மூலம் பொறுப்பு கூறலுக்கான தனது கடப்பாட்டை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விசாரணைப் பொறிமுறையும் விசாரணைகளை நடத்துகின்ற பொறுப்பும் அரசாங்கத்தின் கைகளில் இருந்து சர்வதேச வெளியரங்கில் கைமாறிவிடும்.

அதன் பின்னர் எந்த விசாரணைகளையும் சிறீலங்கா அரசினால் நடத்த முடியாத நிலைமை உருவாகிவிடும். சர்வதேச அரங்கில் பேரவையின் எந்தவோர் உறுப்பு நாடும் தான் விரும்பிய வகையில் தனது உள்ளக விசாரணைகளையோ அல்லது சர்வதேச விசாரணைகளையோ நடத்துவதற்கு அது வழிவகுத்துவிடும்.

இந்த விடயத்தைப் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பிலான தமிழ்த்தரப்பு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அத்தகைய புரிதலின் அடிப்படையில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை சரியாக இனம் கண்டு, அவர்களை சாட்சியங்களாகத் தாயர்ப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் சேகரிக்கப்படுகின்ற ஆதாரங்களைப் பயன்டுத்த வல்ல நாடுகளைக் கண்டறிந்து அவற்றின் ஊடாக உரிமை மீறல்களுக்கு எதிராக வழக்காடுவதற்குத் தூண்ட வேண்டும்.

எனவே 46-1 பிரேரணை தொடர்பில், முரண்பாடானதும், பல்வேறு வகைப்பட்டதாகவும் கிளர்ந்து எழுந்துள்ள கருத்துக்கள் எதிர்வினைகளுக்கு மத்தியில் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களினாலும் போர்க்குற்றச் செயல்களினாலும் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழ்த்தரப்பின் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் சமூக அமைப்புக்களும் இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள சாதகமான அம்சங்களைத் தகுந்த முறையில் பயன்படுத்தி, தமது நீதிக்கான ஏக்கத்தைப் போக்கிக் கொள்ள முன்வர வேண்டும்.