ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த இம்மாதம் பிரிட்டன் வெளியேறுகின்றது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் இம்மாதம் 31ஆம் திகதிக்குள் வெளியேறுமென மூத்த அமைச்சர் மைக்கேல் கோவ்  ஸ்கை தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் ஐரோப்பாவிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான சாத்தியமும், தைரியமும் உள்ளதாகக் கூறினார்.

ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிராக 322இற்கு 306 பெரும்பான்மை அடிப்படையில் பிரிட்டன் நாடாளுமன்றம் சனிக்கிழமை ஒரு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது.

ஒப்பந்தம் இல்லாமலே ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு குறிப்பிட்ட திகதியான ஒக்டோபர் 31ஆம் திகதி பிரிட்டன் வெளியேறிவிட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு இது பின்னடைவைத் தந்துள்ளது.

ஆனால், நாடாளுமன்றம் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில்,  அதை ஒட்டி சட்டப்படியான கடமையை நிறைவேற்றும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்று கோரி, தனது தனிப்பட்ட கருத்திற்கு மாறாக, பொறிஸ் ஜோன்சன் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், அந்தக் கடிதத்தில் அவர் கையொப்பம் இடவில்லை. அதே சமயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவர் இரண்டாவதாக கையெழுத்துடன் ஒரு கடிதம் எழுதியிலுள்ளார். அதில்  பிரெக்ஸிட்டை தாமதப்படுத்துவது தவறு என்று தாம் தனிப்பட்ட முறையில் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹவுஸ் ஒப் காமன்ஸ் அவையில் சனிக்கிழமை நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் தாம் தோற்ற பிறகு, பிரெக்ஸிட்டை தாமதப்படுத்துவதற்கான கோரிக்கை நகலை கையொப்பம் இல்லாமல் அனுப்பி வைக்கும்படி மூத்த ராஜ்யதுறை அதிகாரியை பொறிஸ் ஜோன்சன் கேட்டுக் கொண்டார்.

இரண்டாவதாக கையெழுத்துடன் அவர் அனுப்பிய கடிதத்தில், பிரெக்ஸிட்டை தாமதப்படுத்துவதாகவும், கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களோடு எட்டப்பட்ட திருத்தப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்றும், ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் அதை செய்து முடிக்க முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும்படி கோரிக்கை விடுப்பதைவிட பள்ளத்தில் விழுந்து தாம் செத்துவிட தயாராக இருப்பதாக முன்பு பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கூறியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கமைய சட்டப்படியாக எழுதப்பட்டதே முதல் கடிதம் என்று பிரதமரின் கடிதத்திற்கு அனுப்பிய அறிமுகக் கடிதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரிட்டனின் பிரதிநிதி சேர் டிம் பேரோ தெரிவித்துள்ளார்.