ஐரோப்பியாவுக்கு செல்ல முயன்ற பாகிஸ்தானியர்கள் ஈரானில் கைது 

ஈரானில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 61 பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஈரான் நாட்டு ராணுவம் ஒப்படைத்திருக்கிறது. 

ஐரோப்பியாவுக்கு செல்லும் திட்டத்துடன் ஈரானின் வெவ்வேறு இடங்களில் முறையான ஆவணங்களின்றி இவர்கள் தங்கியிருந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 22 பேர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், 33 பேர் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் பலுசிஸ்தான், 2 பேர் ஆசாத் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் அனைவரும் Taftan எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐரோப்பியாவுக்கு நல்ல வேலைவாய்ப்புகளைத் தேடிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகின்றது. 

இவ்வாறு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்கள் சட்டவிரோதமாக ஐரோப்பியாவுக்குள் புலம்பெயர எண்ணுவதாக சொல்லப்படுகின்றது. அந்த வகையில், கடந்த 2019ம் ஆண்டில் மனித கடத்தல் தொடர்பில் 4,500 வழக்குகள் பாகிஸ்தானில் பதியப்பட்டுள்ளன. இவ்வழக்குளில் தொடர்புடைய சுமார் 1,600 மனித கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.