ஐரோப்பாவில் கொரோனா, இத்தாலியில் அதிகமானோர் பாதிப்பு

பல்வேறு ஐரோப்பிய நாடுகள்,தங்கள் நாடுகளில் கொரோனா தொற்று இருப்பதாக முதன் முறையாக அறிவித்துள்ளன.

கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 2700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒஸ்திரியா, குரேஷியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இத்தாலிக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒஸ்திரியாவில், இன்ஸ்ப்ரக் நகரில் இளம் இத்தாலிய தம்பதியினருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் பணிபுரிந்த விடுதி மூடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், 70களில் இருக்கும் முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.

குரேஷியாவில் இத்தாலியிலிருந்து திரும்பிவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் டெனிரிஃப் பகுதியில், ஒரு விடுதியில் தங்கியிருந்த மருத்துவர் மற்றும் அவரின் மனைவிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த விடுதியில் இருந்த சுமார் 1000 பேரை பூட்டி வைத்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் இத்தாலிக்கு சென்று திரும்பி வந்தவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.