எழுக தமிழ்’ வெற்றி ஈழத்தமிழர் உரிமை மீட்புக்கான பெரும் சக்தி – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையத்தின் பணிவான வேண்டுகோள்

ஈழத்தமிழர் வரலாற்றில் மீளவும் மக்கள் சக்தியைத் திரண்டெழ வைக்கும் சனநாயகப் போரட்டமாக ‘எழுக தமிழ்’ அமைகிறது. ஈழத்தமிழர்கள் தங்கள் உயிரையும் உடலையும் நாளாந்த வாழ்வையும் போராடியே பாதுகாக்க வேண்டிய நிலையைச் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் 1931இல் பொறுப்பாட்சியைக் காலனித்துவப் பிரித்தானிய அரசாங்கம் சிங்களப் பெரும்பான்மையினரிடம் வழங்கியது முதலாகத் தொடர்கதையாக்கி வருகின்றனர்.

இவ்வகையில் தமிழர்களின் போராட்டங்கள்தான் 1931 முதல் இன்று வரை கடந்த 78 ஆண்டுகளாக இலங்கையில் தமிழினமும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளும் முற்றாகச் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் அழிக்கப்பட்டு விடாது காத்து ஈழத்தமிழர் உரிமைகளைக் காக்கும் மக்கள் கேடயங்களாக வரலாறு படைத்து நிற்கின்றன. அந்த வகையில் “ எழுக தமிழ்” 2019 ஐ ஈழத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாப்புக்குத் தமிழ்மக்கள் சனநாயக வழியில் சக்தியளிக்கும் பெரு முயற்சியெனவே நாம் பார்க்கின்றோம்.

எனவே “ எழுக தமிழ்” வெற்றி ஈழத்தமிழர் உரிமை மீPட்புக்கான பெரும் சக்தி’ என்பதை தாயகத் தமிழக உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரும் மனதிருத்தி,; “எழுக தமிழ்” ஈழத்தமிழர் உரிமைகளை மீட்பதற்கான பலத்தையும் வளத்தையும் அளிக்க வைக்கத் தமிழ் மக்களே ஒன்றாக ஓரணியில் திரண்டெழுங்கள் என அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் அழைப்பு விடுத்து ‘எழுக தமிழ்’ நிகழ்வில் தன்னையும் ஒருமைப்படுத்திக் கொள்கிறது.

இம்முறை ‘எழுக தமிழ்’ ஆறு முக்கிய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. அவை வருமாறு :-

தமிழர்களை உனது குடிகளென அவர்களின் அரசியல் பணிவை ஆயுதமுனையில் தொடர்ந்து பெற்று வரும் சிறிலங்கா அரசாங்கமே

1. உனது தமிழர்களின் தாயகப் பகுதிகளைப் பௌத்த சிங்கள மயமாக்கும் அனைத்துச் செயற்பாடுகளையும் உடனே நிறுத்து

2. அனைத்துலகக் கண்காணிப்பிலான யுத்தக் குற்ற விசாரணைகளை பத்து ஆண்டுகளாக நடாத்தாது உள்ள நிலையை மாற்றி இனியும் காலந்தாழ்த்தாது, உடனே தொடங்கு.

3. மனச்சாட்சியின் கீழ் எதிர்ப்பை வெளிப்படுத்திச் செயல்பட்டமைக்காகவும், காரணமின்றியும், அரசியல் கைதிகளாக உள்ள தமிழர்களை உடனே விடுதலை செய்

4. உனது படைகளிடம் சரணடைந்த போதும், உனது படைகளால் கைது செய்த போதும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் குறித்த விபரங்களை வெளியிட்டு அவர்கள் காணாமலாக்கப்பட்டமை குறித்த நீதி விசாரணைகளைத் தொடங்கு

5. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும் தமிழ் மக்களின் வாழ்வாதார நிலங்களையும் வீடுகளையும் ஆக்கிரமித்துத் தம்வசப்படுத்தி வைத்திருப்பவர்களாகவும் உள்ள சிறிலங்காப் படைகளை மக்கள் வாழ்விடப் பகுதிகளில் இருந்து உடனே விலக்கி, வடக்கு கிழக்கை இராணுவமயப்படுத்துவதை நிறுத்தி, மக்களின் நிலங்களையும் வீடுகளையும் மீளவும் மக்களிடம் கையளித்து அவர்களைச் சுதந்திரமாக வாழ விடு.

6. இடம்பெயர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் விருப்பத் தெரிவுக்கு ஏற்ப அவர்களின் வாழ்விடங்களுக்குத் திரும்பவும் வாழவும் தேவையானவற்றை உடனே செய்

இந்த முன்னுரிமைக் கோரிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் தமிழ் மக்கள் நல்லாட்சி, சனநாயகம், மனித உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வளர்ச்சிகளின்றி பின்தங்கியவர்களாக வடக்கு கிழக்கில் 2009 இலிருந்து தவிக்கிறார்கள் என்பதை உலகிற்கு தெளிவாகவும் உறுதியாகவும் ஒரே தலைமையில் ஓரணியாக எடுத்துரைக்கும் நிகழ்வாக “எழுக தமிழ்” வெற்றிபெற தாயக தமிழக உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் செயற்படுமாறு பாதிப்புற்று இன்று வரை வாழ்வின்றித் தவிக்கும் ஈழத்தமிழ் மக்கள் சார்பாக அனைத்துலக ஈழத்தமிழர்  உரிமை மையம் பகிரங்க வேண்டுகோள் விடுக்கிறது.

அனைத்துலக நாடுகளையும், அமைதிக்காகவும் மனித உரிமைக்காகவும் பாடுபடும் ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலக அமைப்புக்களையும் “ எழுக தமிழ்” மூலம் இலங்கைத் தமிழ் மக்கள் எடுத்துரைக்கும் உண்மைகளையும் தேவைகளையும் அனுதாபத்துடனும் அக்கறையுடனும் கேட்டு அவர்களுக்கு அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப உதவுமாறும் பணிவன்பாக அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் கோரிக்கை விடுக்கிறது.

தாயக தமிழக உலக ஊடகங்களையும் சமுகவலைத்தளங்களையும் ‘எழுக தமிழ்’ மூலம் பாதிப்புற்ற ஈழத்தமிழ் மக்கள் எழுப்பும் குரலைப் பதிவு செய்து அவர்களுக்கு நீதியும், பாதுகாப்பான அமைதியும் கிடைக்க உதவுமாறும் அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறது.