மட்டக்களப்பில் தமிழ் மாணவர்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் தாக்குதல்

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் மைதானத்தில் மாணவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய விளையாட்டு மைதானத்தில் திருகோணமலை இந்துக்கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் இடையில் இன்று வருடாந்தம் நடைபெறும் கிரிக்கட்போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை பாடசாலை மாணவர்கள் வெற்றிபெற்ற நிலையில் அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்வதற்கான ஏற்பாடுகளை இன்று மாலை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மைதானத்திற்குள் நுழைந்த பொலிஸார் மைதான கதவுகளை அடைத்துவிட்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் திருகோணமலை மாணவர்கள் சிலர் இன்று பிற்பகல் கல்லடி பகுதியில் வைத்து தாக்கப்பட்டதாகவும் கிரிக்கட் போட்டியின்போதும் திருகோணமலை மாணவர்கள் சிலருக்கும் சிவானந்தா மாணவர்களுக்கு சிலருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பொலிஸார் மாணவர்கள் மீது கடுமையான முறையில் தாக்குதல் நடாத்தியதுடன் மூன்று மாணவர்களையும் பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத்தொடர்ந்து இன்று இரவு வரையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டதாகவும் பின்னர் அதிபர் ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக பதற்றம் நீங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.