எமது பிரச்சினையை பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் – அனந்தி

போர்க் குற்றம் தொடர்பாக ரோகின்யா முஸ்லிம்களுக்காக  ஐ.நா. சபை எடுக்கப்பட்டது போல ஈழத் தமிழர்களுக்கும் நடக்கும். புலம்பெயர் தமிழர்கள் பிரிந்து நிற்பதால், அவர்களின் அழுத்தம் போதாதாக உள்ளது. இதனால் எமக்கான நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகின்றது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழத் தேசிய முன்னனியின் நாடாளுமன்ற வேட்பாளருமான அனந்தி சசிதரன் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய கருத்தில் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேசம் அதை எதிர்கொள்ளும் சாத்தியம் உண்டா? என்ற கேள்விக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்தப் பிரச்சினையை அவர்கள் இராஜதந்திர ரீதியாக அணுகுவதன் ஊடாகத் தான் எங்கள் நிலையை பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு போகக்கூடியதாக இருக்கும். தற்போது இலங்கை அரசாங்கம் தான் வழங்கியுள்ள இணை அனுசரணையை விலக்கியதாக கூறப்பட்டுள்ள நிலையில் இரண்டு வருட கால நீடிப்பு தேவையில்லை. விரைவில் புலம்பெயர் அமைப்புக்கள் சரி, புலம்பெயர் புத்திஜீவிகள் சேர்ந்து இந்தப் பிரச்சினையை பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

எமது மக்கள் இன உணர்வு கொண்டவர்கள். தமிழ் தேசியத்தின்பால் பற்றுக் கொண்டவர்கள். இப்போது பிரிந்திருந்தாலும் ஒரு காத்திரமான நிலைக்கு கொண்டு செல்லுவார்கள். தாயகமும், புலம்பெயர் தேசமும், தமிழ்நாடும் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். முன்னெடுக்கும்.