என்னை சிறையில் அடைக்க மீண்டும் முயற்சி: ராஜித சேனாரட்ண முறைப்பாடு

என்னை மீண்டும் சிறையில் அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் தமது சட்டவாளரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சகிதம் முன்னிலையாகிய ராஜித சேனாரத்ன, இது தொடர்பில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

ஆணைக்குழுவில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு: –

“ஜனாதிபதி தேர்தலின் போது வெள்ளை வான் கடத்தல் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்புத் தொடர்பாகப் பிணை வழங்கக்கூடிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் அழைப்பாணையைப்பெறாமல், சட்டரீதியற்ற முறையில் பிடியாணையைப் பெற்று என்னை கைது செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும். பின்பு நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்தப் பிணையை மீளாய்வு செய்யக்கோரி மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு திகதி குறிப்பிப்பட்டுள்ளது.

இந்நிலையில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை இரத்து செய்வதற்கான நோக்கத்தில் திட்டமிட்டு முதலாம், இரண்டாம் சந்தேகநபர்களின் ஊடாக பொய்யான குற்றச்சாட்டொன்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவு செய்து, என்னை சிறையில் அடைப்பதற்கு மீண்டும் முயற்சி எடுக்கப்படுகிறது” என ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.