எந்த மதத்தவராக இருந்தாலும் கொரோனாவால் இறந்தவர்கள் எரியூட்டப்பட வேண்டும் இலங்கை அரசு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களின் உடல்கள் கட்டாயமாக எரியூட்டப்பட வேண்டும் என்று இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை 800 முதல் 1,200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 45 நிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை எரியூட்டப்பட வேண்டும். அரசு ஒப்புதல் வழங்கியுள்ள மயானத்தில் அதிகாரியின் மேற்பார்வையில் அவை எரியூட்டப்பட வேண்டும்.

இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு மேற்கொள்ளும் உரிமை உள்ளவர்களைத் தவிர பிற எவரிடமும் உடல் ஒப்படைக்கப்பட மாட்டாது.

மயானத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்பவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளையும், இறந்த நபரை எரியூட்டுவதற்குப் பயன்படுத்தும் பொருட்களையும் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியுடன் சேர்த்து எரியூட்டப்பட வேண்டும். திரும்பப் பயன்படுத்தும் வகையிலான பொருட்கள் முறையான சுத்தம் செய்யப்பட வேண்டும்.

எரியூட்டப்பட்டவரின் சாம்பரை அவருடைய இரத்த சொந்தம் கோரும் பட்சத்தில் வழங்கப்படும்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.