எத்தியோப்பியாவில் நடைபெறும் மனித படுகொலைகள் -சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு

எத்தியோப்பியாவின் வட பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

எத்தியோப்பியாவின் வட பிராந்தியத்தில் உள்ள டிக்ரே பகுதியில் உள்நாட்டு மோதல்  நடைபெற்று வருகின்றது. கடந்த சில நாட்களாக இந்த மோதல்களால் மக்கள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்.

பெடரல் அரசிற்கும் டிக்ரே மாகாணத்தை ஆட்சி செய்யும் டிக்ரே மக்கள் முன்னணிக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

மோதலை கட்டுப்படுத்துவதற்கு எத்தியோப்பிய அரசு வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இந்த தாக்குதல்களினால் கடந்த 9 ஆம் திகதி பெருமளவானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் அவற்றை உறுதிப்படுத்துவதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

மோதல்களினால் எத்தியொப்பியாவை சேர்ந்த சுமார் 7000 இற்கும் மேற்பட்டோர் அண்டை நாடான சூடானுக்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.