03. “உள்ளூராட்சி மன்ற தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை’ என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய (05) பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
‘இந்த விடயம் கடந்த நாட்களில் முக்கிய பேசுபொருளாகவும் இருந்தது’. ‘நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைத்துள்ளதாக அறிய கிடைக்கின்ற போதிலும் அதனை வெளிப்படுத்துவதற்கு சபாநாயகருக்கு முடியாமல் போயுள்ளது’ என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன, ‘குறித்த வியாக்கியானம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை’ என்று பதிலளித்தார்.
இதனையடுத்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, கடந்த வாரம் ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்துரைத்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதென குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டினார்.
‘எனவே, சபாநாயகருக்கு உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைக்கவில்லை என்றால், எதற்காக அமைச்சரவை பேச்சாளர் அவ்வாறான கருத்தை வெளியிட்டார் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சபாநாயகர் முன்வைக்கும் தகவலே, சரியானது என குறிப்பிட்டார்.
இதனையடுத்து கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘சபாநாயகரின் ஊடாக இடம்பெற வேண்டிய செயற்பாடு உரிய முறையில் இடம்பெறாத காரணத்தில் சபாநாயகரினதும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
‘அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறவுள்ள தினம் உள்ளிட்ட தகவல்களும் ஆளும் தரப்பினரால் வெளிப்படுத்தப்பட்டது’ என்று எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க, ‘உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்படுகின்ற வழக்கின் தீர்ப்பு எந்த காலப்பகுதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
‘இதற்கமையவே, கணிப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் திகதி உள்ளிட்ட விபரங்கள் அறிவிக்கப்பட்டது’ என்றும் சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
இந்தநிலையில், இறுதியாக பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன, தாமே பாராளுமன்றத்தின் சபாநாயகர் என்ற அடிப்படையில் தாம் கூறுவதனை மாத்திரம் கவனத்தில் கொள்ளுமாறு தெரிவித்தார்.



