உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: யாழில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கை நேற்று (20) முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய, நாடளாவிய ரீதியல் 107 அரசியல் கட்சிகளும் 49 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. அவற்றில் பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும், 13 சுயேச்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தன. அவற்றில் 136 கட்சிகளும், 23 சுயேச்சை குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன. அதில் 114 கட்சிகளினதும், 10 சுயேச்சை குழுக்களினதும், வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 118 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஏனைய, 101 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஷ்ரீனா முரளிதரன் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 110 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அவற்றில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், 97 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் நுவரெலியா மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 34 கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 38 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் சில சபைகளில் தங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்தவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘வடக்கு கிழக்கில் எம்மை ஓரம் கட்டி விட்டு ஆளும் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை மாத்திரம் தேர்தலில் போட்டியிட வைக்கும் செயற்பாட்டை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துள்ளதாகவே நாம் சிந்தேகிக்கின்றோம்’என்று சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.