உல்லாசப் பயணிகளாக வந்த பிரான்ஸ் கடற்படையினர் – இலங்கையில் நேற்று முதல் சுற்றுலா

பிரான்ஸ் கடற்படை உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கையின் சில இடங்களில் சுற்றுலா மேற்கொண்டனர். பிரான்ஸ் தூதரகத்தினூடாக வெளிவிவகார அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பிரான்ஸ் கடற்படை உறுப்பினர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் எனசுற்றுலா அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார்.

அதற்கமைய, நாட்டுக்கு வந்த கடற்படை உறுப்பினர்களில் 101 பேர் யா எல சரணாலயத்துக்கும் 86 பேர் உடவலவ தேசிய சரணாலயத்துக்கும் 235 பேர் ஹபரணை பிரதேசத்திற்கும் சுற்றுலா சென்றனர்.

பிரான்ஸ் கடற்படையினரின் சுற்றுலாப் பயணங்கள் அனைத்தும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேற்பார்வையில் இடம்பெறுகின்றன.

பிரான்ஸ் கடற்படையின் 750 உறுப்பினர்களை ஏற்றிய 02 கப்பல்கள் கடந்த திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இவர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.