உலக நாடுகள் அவசர நிலையை அறிவிக்க வேண்டும்- ஐ.நா

உலக நாடுகள் பருவநிலை தொடர்பான அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 5ம் ஆண்டு தினத்தை ஒட்டி நடந்த ஒரு முக்கியமான உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பேசும்போது அன்டோனியா குட்டரெஸ் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

“38 நாடுகள் ஏற்கெனவே பருவநிலை அவசர நிலையை அறிவித்துள்ளன. இதே போன்ற அவசர நிலையை உலகில் உள்ள எல்லா நாடுகளும் அறிவிக்கவேண்டும். கார்பன் நியூட்ராலிட்டி என்ற நிலையை எட்டும் வரை இந்த அவசர நிலை தொடரவேண்டும்” என்று குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகை அலைகழித்து வருகிறது. இந்நிலையில் அடுத்து உலகை அச்சுறுத்தும் பெரிய சிக்கலாக பருவநிலை மாற்றம் இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸின் இந்த  அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.