உலகம் கொரோனா வைரஸால் அவதிப்படுகையில், வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா கிழக்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்கொரியா தெரிவிக்கையில், “வடகொரியாவின் கிழக்குப் பகுதி நகரமான மன்சோன்னில் உள்ள கடல் பகுதியில் ஏவுகணை சோதனையை காலை 7 மணியளவில் நடத்தியது. வடகொரியா ஏவிய ஏவுகணை 150 கிலோ மீற்றர் தூரம் சென்று பின்னர் நீரில் விழுந்தது.“ என்று தெரிவித்தது.

ஆனால் இதுவரையில், வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவியதா? கட்டுப்படுத்தப்பட்டதா? பலி எண்ணிக்கை என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

கடந்த 21ஆம் திகதி வடகொரியா கே.என்.-24 என்ற குறுகிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்தது.

தொடர்ந்து அத்துமீறி ஏவுகணை சோதனைகளை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவிற்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.