உலகத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் ‘உலகத் தமிழ் பாராளுமன்றம்’

உலகத் தமிழ் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடவும், அதன் ஊடாக தமிழர்களின் அரசாங்கத்தின் சலுகைகளை பெறவும், பல்வேறு நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினைகளுக்கு அந்தந்த நாட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து, தீர்வு காண்பதற்கும் ஏதுவாக 8 நாடுகளைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் உட்பட 147 பேரை ஒருங்கிணைக்கும் வகையில்  ‘உலகத் தமிழ் பாராளுமன்றம்’  என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

உலகத் தமிழர்களை அந்தந்த நாட்டுச் சட்ட திட்டங்களுக்கும் இறையாண்மைக்கும் கட்டுப்பட்டு, ஒன்றாக ஒருங்கிணைக்கும் பணியை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாகவே, உலகத் தமிழ் பாராளுமன்றம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது.  

இந்த அமைப்பில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், கனடா, பப்புவா நியூகினி, கயானா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் உட்பட 147பேரை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு முன்னெடுத்து வருகின்றது. 

இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த இந்த அமைப்பின் தலைவரும், தமிழ் பாராளுமன்றத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளருமான செல்வக்குமார் கருத்துத் தெரிவிக்கையில், “உலகம் முழுவதும் சுமார் 13 கோடியே 60 இலட்டசம் தமிழர்கள் இருக்கின்றார்கள்.  இது உலக மக்கள் தொகையின் 2 சதவீதமாகும். பல்வேறு நாடுகளில் இவர்கள் அரசியல் அதிகாரம் செலுத்தும் முக்கிய இடத்திலும் இருக்கிறார்கள்.  

ஆயினும் அரசியல் மற்றும் மாறுபட்ட கொள்கைகளால் இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருக்கின்றது. அவற்றைக் கடந்து, தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடன் போராட்டத்தைத் தவிர்த்து சுமுகமாய்ப் பேசி பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வைப்பதே உலகத் தமிழ் பாராளுமன்றம் அமைக்கப்பட்டதன் நோக்கமாகும். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கி திமுக, அதிமுகவிற்கு 59 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இத்துடன் நிர்மலா சீதாராமன், சுப்பிரமணியசுவாமி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்தால், தமிழகம், புதுச்சேரியில் 62 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  

இலங்கையில் 47 தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும், சிங்கப்பூரில் 10 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், கனடாவில் 2பேரும், மொரீஷியஸில் 3பேரும், கயானா மற்றும் பப்புவா நியூகினியில் தலா ஒருவரும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். மேலும் மலேசியாவில் 15 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், 6 செனட்டர்களும் பதவியில் உள்ளனர். இந்த 147 பேரையும் ஒருங்கிணைத்து தான் உலகத் தமிழ் பாராளுமன்றத்தை உருவாக்கி இருக்கிறோம். 

மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்களில் 80 வீதமானவர்களுக்கு இதுவரை மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறோம். எதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது என்பது குறித்தும் அதனால் உலகில் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை சுருக்கமாக விளக்கியிருக்கின்றோம்.  

வளர்ந்த நாடுகளில் மனிதவள மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியானது பெருமளவு பயன்படுத்தப்படாமல் தேங்கிக் கிடக்கின்றது. அத்தகைய நாடுகள், வளரும் நாடுகளுக்கு மனிதவள மேம்பாட்டு நிதியைத் தந்து உதவத் தயாராக இருக்கின்றன. அதைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதற்கு உலகளாவிய ஒருங்கிணைப்பு தேவை.    

இவ்வமைப்பிற்கு பன்னாட்டு ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன். இலங்கைக்கு சுப்பிரமணிய தியாகு, சிங்கப்பூருக்கு ராஜேந்திர பூபதி, மலேசியாவிற்கு தீனதயாளன், மொரீஷியஸிற்கு நித்தியானந்தா, கனடாவிற்கு ஆலன் டீன் மணியம், கயானா மற்றும் பப்புவா நியூகினிக்கு ஜனகன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்பட உள்ளனர். 

கொரோனா காலம் என்பதால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஓரிடத்தில் அழைத்து பொதுவான விவாதம் நடத்த முடியாத நிலை இருக்கின்றது. எனினும் முதல்கட்டமாக இன்னும் இரண்டு வாரத்தில் மேற்கண்ட 8 நாடுகளைச் சேர்ந்த 20 பாராளுமன்ற உறுப்பினர்களைக் காணொளியில் அழைத்து பொது விவாதம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றோம். 

உலகத் தமிழ் பாராளுமன்ற அமைப்பிற்கு ஆண்டுக்கு ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலைவராக இருந்து பணியாற்றுவார். அவருக்கு துணையாக முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்களைக் கொண்ட கீழமை ஆலோசனை மன்றம் ஒன்றும் செயற்படும். ஆண்டு தோறும் ஜனவரி மாதம் சென்னையில் உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பு உலகத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து மாநாடு நடத்தும். அப்போது அந்தந்த ஆண்டிற்கான செயற்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதன் வழியே உலகத் தமிழ் பாராளுமன்றம் செயற்படும்” என்றார்.