உக்ரைன் ஜனாதிபதி, ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் தொடர்பில் நம்பிக்கையில்லா தீர்மானம்

தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு சக்தி ஒன்றின் உதவியை நாடியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் உத்தியோகபூர்வ விசாரணை ஒன்றை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி அவசியம் பொறுப்புக் கூற வேண்டும் என்று முன்னணி ஜனநாயக கட்சி உறுப்பினரான நான்சி பொலோசி குறிப்பிட்டுள்ளார்.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்திருக்கும் ட்ரம்ப், இதனை ஒரு சூனிய வேட்டை என்று சாடியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில் ஆதரவு இருந்தபோதும் குடியரசு கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் செனட்டில் அதனை வெல்லவெய்ப்பது கடினமானதாகும்.

அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், ஜனாதிபதி ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் செய்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.

இவர்கள் இருவரும் தொலைப்பேசியில் என்ன பேசினார்கள் என்பது கூறப்படவில்லை, ஆனால் ஜனாதிபதி ட்ரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரைன் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு கிடைத்து வரும் இராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஜோ பைடன் மற்றும் அவரது மகனுக்கும் உக்ரைன் எரிசக்தி நிறுவனத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை நடத்தவே ட்ரம்ப் அழுத்தம் கொடுத்திருப்பதாக தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், தி நியூயோர்க் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

2020ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் ட்ரம்ப் இவ்வாறு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரம்ப் அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட்டதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனநாயக கட்சி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நியூயோர்க் வந்த ட்ரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், பதவிநீக்க நடவடிக்கை குறித்த பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை என்றார். உக்ரைன் ஜனாதிபதிக்கான தொலைபேசி பேச்சு நல்ல முறையில் இருந்தது என்றும், ஜனநாயக கட்சியினர் தனக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

உக்ரைன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, 2 ஜனாதிபதிகளுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் அது, அதுகுறித்து எதுவும் தெரிவிக்க இயலாது என்று கூறினர்.

எனினும் உக்ரைனுக்கான இராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்த ட்ரம்ப், அது ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று தெரிவித்தார்.

அமெரிக்க வரலாற்றில் இரு ஜனாதிபதிகளுக்கு எதிராக இதற்கு முன்னர் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 1868 ஆம் ஆண்டு அன்ட்ரூ ஜோன்சனுக்கு எதிராகவும் 1998 ஆம் ஆண்டு பில் கிளின்டனுக்கு எதிராகவும் இந்த தீர்மானங்கள் கொண்டுவரப்பட்போதும் அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் செனட் சபையால் தோற்கடிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றுக்கு முகம்கொடுப்பதற்கு முன்னர் 1974 ஆம் ஆண்டு ரிச்சட் நிக்சன் பதவி விலகினார்.