ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் கைதான முக்கிய நபர் விடுதலையானது எப்படி? முஜிபூர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஆரம்பத்தின் போது கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் கீழ் விடுதலை செய்யப்பட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இதனை தெரிவித்துள்ள அவர், 2019 ஏப்பிரல் 29 ம் திகதி இந்த நபர் பாணந்துறையில் கைதுசெய்யப்பட்டார் எனவும் குறிப்பிட்டார். இராணுவபுலனாய்வு பிரிவினர் இந்த நபரை கைதுசெய்து பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளிற்காக கைதுசெய்தனர் எனவும் அவர் கூறினார்.

இந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல முக்கிய தகவல்கள் கிடைத்தன என தெரிவித்துள்ள முஜிபூர்ரஹ்மான் அந்த நபர் தான் நவ்பர் மௌலவியை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டார் எனவும் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

குருநாகலில் நவ்பர்மௌலவியை சந்தித்ததாகவும் அவர் தனது மகனிற்கு விரிவுரை வழங்கியதாகவும் அதன் போது ஜஹ்ரானுடன் இருந்த 20 பேரை தான் சந்தித்தாகவும் கைதுசெய்யப்பட்ட நபர் சந்தித்தார் என முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நபர் தான் நவ்பர் மௌலவி மற்றும் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றியதாக தெரிவித்திருந்தார் இந்த விபரங்கள் டீஐடியினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

2019 ஒக்டோபரில் குறிப்பிட்ட நபரை பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றத்தில் முன் ஆஜர் செய்ததுடன் அவர் தீவிரவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் ஆபத்தான நபர் என தெரிவித்திருந்தனர்என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அவர் ஏனையவர்களை கவரக்கூடியவர் என்பதால் தனியாக வைத்திருக்கவேண்டும்என ரிஐடியினர் தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் 2020 இல் அவரை விடுதலை செய்யுமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினருக்கு சட்டமா அதிபர் கடிதம் அனுப்பியிருந்தார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.