ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிபால சிறிசேன விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்

கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்கள் குறித்து சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் (05) விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
கடந்த ஆண்டு ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21ஆம் திகதி 3 தேவாலயங்கள், உல்லாச விடுதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் 258பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) என்ற அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உரிமை கோரியிருந்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே உளவுத்துறையினர் தகவல் கொடுத்திருந்தும் அதைத் தடுக்கத் தவறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையம் கடந்த மாதம் மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது. இதனையடுத்து, அவர் நேற்று முன்னிலையாகியிருந்தார். அவரிடம் 7மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் போது பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதிக்கு முன் உளவுத்துறையிடமிருந்து தகவல் கிடைத்தும் அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தன்னிடம் தகவல் தரவில்லை என்றும், தகவல் கிடைத்திருந்தால் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்க முடியும் என்றும் சிறீசேன தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.