ஈழம் வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த விக்கி

இந்திய தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்த, முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,  தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன்,  மு.க.ஸ்டாலினை ஈழம் வருமாறும், அதற்குரிய ஒழுங்குகளை தான் மேற்கொண்டு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கு அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, திராவிட முன்னேற்றக் கழகம் செயற்பட்ட விதம் தொடர்பாக எமது மக்கள் மத்தியில் இன்றும் ஏமாற்றமும், கசப்புணர்வும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

எமது மக்களின் அரசியல், பொருளாதார சமூக முன்னேற்றங்களை நிறைவேற்றும் வகையில் நீங்கள் எதிர்காலத்தில் திட்டங்களை முன்னெடுப்பீர்கள் என நம்புகின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில் மென்மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் கண்டு, தமிழகத்திற்கும் உலகில் வாழும் தமிழ் மக்களுக்கும் நல்ல பணிகளை நிறைவேற்றும் என நம்புகின்றேன்.

இவை தொடர்பாக என்னாலான உதவிகளையும் ஒத்தாசைகளையும் நிச்சயம் உங்களுக்கு நான் வழங்குவேன். எமது மக்களின் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்ளவும், எமது மக்களுக்கும் தமிழக மக்களுக்குமிடேயே சமூக, கலாசார தொடர்புகளை வலுப்படுத்தவும் நீங்கள் ஒருதடவை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.