ஈழத்து மக்கள் தொடக்கத்திலிருந்தே மீண்டும் தொடங்க வேண்டியிருக்கிறது – தோழர் பாஸ்கர்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தோழர் பாஸ்கர் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

கேள்வி – போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவு கூரப்படும் இனப் படுகொலை நாளில் தமிழ் மக்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தாலும், அதில் உயிர் நீத்தாருக்கு நினைவு கூருவதற்கு உரிமையே இல்லாத ஒரு சூழலே நிலவுகிறது. வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் சென்ற புதன் அன்று புதிய நினைவுக் கல் வைக்கப்படும் போதே இராணுவமும் போலீசாரும் எதிர்த்திருக்கிறனர். பின்னர் அது சேதாரம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் இன்றைய சூழலுக்கு குறியீடு. ஈழத்து மக்கள் தொடக்கத்திலிருந்தே மீண்டும் தொடங்க வேண்டியிருக்கிறது. ஆனால் அனுபவம் இருக்கிறது. படிப்பினைதான் தேவை. ஆனால் படிப்பினையை கண்டு கொள்ளாத போக்கே முதன்மையாக நிலவுகிறது. சொல்லப் போனால் எந்தக் கண்ணோட்டம் முள்ளிவாய்க்காலை தோற்றுவித்ததோ அதுவே மேலோங்கியிருக்கிறது.  முள்ளிவாய்க்காலின் காரணகர்த்தாவான இந்தியா எனும் எதிரியிடம் சரணடைந்தாலாவது ஈழத்திலும் புலம்பெயர் இடங்களிலும் ஏதாவது கிடைக்காதா என்று ஏமாந்தே காத்துக் கிடக்கின்றனர் ஈழத்து அரசியல் செயற்பாட்டாளர்கள்.

முதலாவதாக ஈழத்து மக்களின் அன்றாட கோரிக்கைகளுக்காகவும், இரண்டாவதாக  வடக்கு கிழக்கு மாகாண இணைப்புக்காகவும், மூன்றாவதாக பொது வாக்கெடுப்புக்காகவும் வெவ்வேறு மட்டங்களிலான கூட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும்.    அதற்கு குறுங்குழு வாதத்திலிருந்து விடுபடவேண்டும்.

அண்டையிலுள்ள இந்தியாவில் சென்ற ஆண்டில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் மக்கள் திரள் வழியில் சிறப்பாக நடைபெற்றது.

இப்பொழுதோ விவசாயிகள் போராட்டமும், அதேபோல் ஐந்து மாதங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இத்தகைய போராட்டங்களைப் போல் மக்கள் திரள் எழுச்சிகளை கட்டியமைப்பதற்கு முடியுமா என்று கவனம் செலுத்தவேண்டும்.