ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாறிவரும் உலகமும், அதனை முறியடிக்கக் களமிறங்கும் சிறீலங்காவும் – சூ.யோ. பற்றிமாகரன்

புலம்பெயர் தமிழர், வடக்கு கிழக்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கும் தடை
மனிதாய உதவிகள் கூட மறுக்கப்பட்ட, நலிவுற்ற மக்களாக ஈழத்தமிழர்கள்

இலங்கைத் தீவைத் தாயகமாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இறைமையுடனும், ஆட்புல ஒருமைப்பாட்டுடனும் கொண்டு விளங்கும் ஈழத் தமிழர்களின் அரசியல் எதார்த்தத்துக்கு ஆதரவு அளிக்கும் செயற்பாடுகள் படிப்படியாக உலகெங்கும் அதிகரித்து வருகிறன.

இதற்கு உதாரணமாக அமெரிக்க காங்கிரசில் ஈழத் தமிழர்களின் வாழ்விடமாக வடக்கு கிழக்கை உறுதிப்படுத்தும் தீர்மானம் முன்வைக்கப்பட்டமை விளங்குகிறது. இது உலகப் பாராளுமன்ற முறைமைக்கு ஊடான ஈழத் தமிழர்களின் உரிமைக்கான அக்கறை முன்னெடுக்கப்படத் தொடங்கி விட்டதற்கு உதாரணமாகிறது.

ஏற்கனவே பாராளுமன்றங்களின் தாய் எனப்படும் பிரித்தானியப் பாராளுமன்றத்திலும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்த ஆழமானதும், தெளிவானதுமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையை உலகு அறியும்.

அவ்வாறே இந்தியாவும், இலங்கையில் தமிழர்களின் வாழ்வின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், இலங்கை – இந்திய உடன்படிக்கையின் வழியான 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து பேணி, நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வெளிப்படையாக ஐக்கிய நாடுகள் சபை வரை கூறிவருகிறது. இந்தியா ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் அமர்வில் தமிழர்களுக்கான வாழ்வின் கண்ணியம் பாதுகாக்கப்படத்தக்க அரசியல் தீர்வு முன்வைக்கப்படாமல் மனித உரிமைகளை முன்னேற்றுதல் என்பது இலங்கையில் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதையும் உறுதியாக எடுத்துரைத்துள்ளது. இந்தியா கையாளத் தொடங்கியிருக்கும் ஈழத் தமிழர்களின் வாழ்விடம் என்னும் சொல்லாட்சி அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவிலும் கையாளப்பட்டுள்ளமை இருதேசங்களும் இணைந்த அக்கறை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் வளர்வதை எடுத்துக் காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகமும் இலங்கையில் இடம்பெற்று – இடம்பெறுகிற அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான மனித உரிமை வன்முறைகள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த தரவுகளைச் சேகரித்துத் தொகுத்து வகுத்தலுக்கான அலுவலகத்தை நிறுவி, அதற்கான நிதி வளத்தையும் ஒதுக்கியுள்ளது.

2022இல் அளிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின்  வாய்மொழி அறிக்கையினதும், 2023இல் தாக்கல் செய்யப்படவுள்ள எழுத்துருவ அறிக்கையினதும் அடிப்படையில் அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைவாக சிறீலங்கா மேல்  இவை குறித்த அனைத்துலக  நீதிவழங்கல் விசாரணைகளை மேற்கொள்வதற்கான கால அவகாசமாக இரண்டு ஆண்டுகளை எல்லைப்படுத்தியுள்ளது.

இந்த உலகளாவிய ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அரசியல், சட்ட, நீதி நிலை மாற்றங்களின் வளர்ச்சியின் மற்றொரு இணைவாகப் பிரித்தானியாவில் தமிழ் அகதிகள் இருவரின் மேன்முறையீட்டை விசாரணை செய்த பிரித்தானிய அகதிகள் மேன்நிலைத் தீர்ப்பாயத்தின் மூன்று நீதியரசர்களின் ஒருங்கிணைவான தீர்ப்பு அமைகிறது. மூன்று நீதியரசர்களும்  பிரித்தானியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அரசியல் புகலிடம் அளிப்பதற்கு இந்நாடுகளினால் தயாரிக்கப்பட்ட சிறீலங்கா குறித்த நாட்டறிக்கையை ஆதாரமாகப் பயன்படுத்துவதைக் கண்டித்துள்ளமை அமைகிறது. இலங்கையில் காணப்பட்ட காணப்படுகிற ஈழத் தமிழர்கள் மேலான சித்திரவதைப்படுத்தல் தொடர்வது குறித்த தனிப்பட்ட ஆனால் ஆதாரபூர்வமான பல அறிக்கைகள், சான்றாதாரங்கள் சரிவர இந்நாட்டறிக்கைகளில் உள்ளடக்கப்படாததினால், இந்த நாட்டறிக்கைகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் அரசியல் புகலிடக் கோரிக்கை தீர்மானிக்கப்படக் கூடாதெனத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் சிறீலங்கா குறித்த நாட்டறிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட உண்மைகள் கண்டறியும் செயற்பாடுகள் முறைமைகளில் உள்ள குறைபாடுகளையும் இத்தீர்ப்பு எடுத்து விளக்கியுள்ளது. இத்தீர்ப்பு தற்பொழுதும் ஈழத்தமிழர்கள், இலங்கையில் இனங் காணக் கூடிய அச்ச வாழ்வுக்கும், சித்திரவதைப்படுத்தல்களுக்கும் பரவலாகத் தொடர்ந்து உள்ளாக்கப்படுகின்றனர், என்ற உண்மையை உலகுக்கு எடுத்து விளக்கியுள்ளது. அத்துடன் ஈழத்தமிழர்களுடைய அரசியல் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அவர்கள் சிறீலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படுவது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மரபு உரிமைச் சாசனத்திற்கு எதிரான சட்டவிரோதச் செயலாக அமையும் என மனிதஉரிமைகளைப் பேணும் வகையில் எச்சரித்துள்ளது.

இவ்வாறு ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்கான உலகக் குரல்கள் வளரத் தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில், ஈழத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், உலகெங்கும் முக்கிய நாடுகளின் குடிகளாக வாழும் தமிழர்கள் என்னும் மூவித வகைமையைக் கொண்ட உலகத் தமிழினம், எவ்விதம் ஈழத்தமிழர்களின் உரிமைகள் குறித்த உலக அக்கறையை, ஈழத் தமிழர்கள் உரிமை மீட்புக்கான உலகின் பலமாக முன்னெடுக்கப் போகின்றார்கள் என்பது முதல்நிலையில் தமிழர்கள் அனைவரும் இணைந்து தமிழ்த் தாயின் பேரால் எடுக்க வேண்டிய முடிபாக உள்ளது.

அதே வேளை சிறீலங்கா அரசாங்கம் உலகில் தோன்றியுள்ள ஈழத் தமிழர்களுடைய உரிமைகளுக்கான ஆதரவு நிலையை இல்லாதொழிப்பதற்கு தனது ஈழத்தமிழின அழிப்புத் திட்டத்தின் அனைத்துலக விரிவாக்கத்தைத் தான் சிறீலங்காவின் உலகால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசு என்ற தகுதி நிலையைப் பயன்படுத்தி விரைவு படுத்தி வருவதை எவ்வாறு உலகத் தமிழினம் எதிர்கொள்ளப் போகிறது என்பது அடுத்த முக்கிய பிரச்சினையாக உள்ளது.

கடந்த வாரத்தில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாராஹல்டன், முதலாவது செயலாளர் அன்ரூ பிரைஸ் ஆகியோருடன் சிறீலங்காவின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சா, ஐனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கா வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த உயர்மட்ட உரையாடலில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின்  சிறீலங்காவைப் பொறுப்புக் கூற வைத்தல் தொடர்பான முயற்சிகளுக்குப் பிரித்தானியா முதன்மை வகிப்பது தொடர்பான விடயங்களுக்கு ஜனாதிபதி பதில் விளக்கங்கள் அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இது பிரித்தானியாவின் ஈழத் தமிழர்கள் உரிமைகள் தொடர்பான நீதியானதும், நேர்மையானதுமான முன்னெடுப்புக்களுக்கான சிறீலங்காவின் எதிர்வினையாக அரசியல் அவதானிகளால் எடுத்து நோக்கப்படுகின்றது.

அதே வேளை கடந்த ஜனவரி மாதத்தில் சிறீலங்கா – அமெரிக்க உறவை முன்னேற்றம் காணச் செய்வதற்கான வழி கண்டறிதல் மெய்நிகர் நிகழ்ச்சி ஒன்றைச் சிறீலங்கா வாசிங்டனில் உள்ள ஆசிய சமூக கொள்கை நிறுவனத்துடன் இணைந்து நடாத்தியிருந்தது. இந்த மெய்நிகர் உரையாடலின் அடிப்படையிலான பொருளாதார உறவுகளை வளர்த்தல், அமெரிக்க ஜனாதிபதி பைடன் அவர்களுடனான உறவுகளை வளர்த்தல் என்னும் இருதள அறிக்கை தற்பொழுது சிறீலங்கா ஜனாதிபதியிடம் செயற்பாட்டுத் திட்டங்களை தொடங்குவதற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. இம்முயற்சிகளும் அமெரிக்க அரசாங்கத்தின் ஈழத்தமிழர் உரிமைகள் தொடர்பான அக்கறைகளையும் ஆர்வத்தையும் மென்மைப்படுத்துவதற்கான அரசியல் இராசதந்திர நடவடிக்கைகளாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு சிறீலங்கா தனது ஈழத்தமிழின அழிப்புக்கு எதிராக அணிதிரளும் உலக நாடுகளையும், அமைப்புக்களையும் உலக அரசியல் களத்தில் சந்தித்து தன்னை நிலைப்படுத்துவதற்கான புதிய இராசதந்திர பொருளாதார அரசியல் களமொன்றை, தான் இலங்கைத் தீவுக்கான அரசாங்கம் என்ற உலகநிலையைக் கொண்டு தொடங்கியுள்ளது. இது உண்மையில் ஈழத்தமிழர்களின் உரிமை மீட்பு முயற்சிக்கான ‘பனிப்போராக’த் தொடங்கப் பெற்றுள்ளது.

இந்த உண்மைகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்கள் தங்களின் வெளியக தன்னாட்சி உரிமையினை அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைவாக உலகநாடுகளின் வழியாகவும், உலக அமைப்புக்கள் வழியாகவும் உறுதிப்படுத்துவதை,

  • இந்தப் பனிப்போர் மூலமும்,
  • ஈழத் தமிழர்களுக்குத் தாயகத்தில் தனது படைபலம் மூலம் ஏற்படுத்தி வரும் இனங்காணக் கூடிய அச்ச வாழ்வை, உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு, இராசதந்திர வழிகள் மூலமாகவும், சந்தை இராணுவ நலன்களை நாடுகளுக்கு அளிப்பதன் வழியாகவும், இருதளங்களில் அகலப்படுத்துவதன் மூலமாகவும்

சிதைத்தல் என்பதே இன்றைய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையாகவும், வெளிநாட்டு உறவாடல் தொடர்பாடலாகவும் உள்ளது.

இது கிட்லர் யூதர்களை இனஅழிப்புச் செய்வதற்கு, தான் பாராளுமன்றத்தின் மூலம் உருவான யேர்மனின் அதிபர் என்ற தகுதியில்  இத்தாலி உட்பட்ட மத்திய நாடுகளின் படைக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கிய பாணியிலானது. நேச நாடுகளின் படைக் கூட்டமைப்பே கிட்லரின் சர்வாதிகாரத்தை முறியடித்தது வரலாறு. ஈழத் தமிழர்களுக்கான நேசநாடுகளின் கட்டமைப்பு ஒன்றின் மூலமே ஈழத் தமிழின அழிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட முடியும்.

உலக அமைதிக்கும், இந்துமா கடலின் அமைதிக்கும், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமையின் அவசியத்தைப் புரிந்து கொள்ளும் நேச நாடுகளின் அமைப்பு ஒன்றை உலகத் தமிழர்கள் வேகமாகக் கட்டியெழுப்பி, ஈழத் தமிழர்களுக்கு அவர்களுடைய வெளியக தன்னாட்சி உரிமையினை நிலை நிறுத்துவதற்கு, இலங்கைத் தீவின் அரசாங்கம் என்ற தனது உலக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஏற்படுத்தி வரும்  உலக நெருக்கடிகளை, முறியடிக்க வேண்டும்.

உண்மையில் ஈழமக்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் 2009 இல் சிறீலங்காவின் இனஅழிப்பால் ‘ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட’ நிலையில் இடைநிறுத்தம் பெற்றதை அடுத்து, சனநாயக வழிகளில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக முன்னேற்றம் கண்டு வருவதை இன்றைய உலக ஆதரவுகள் தெளிவுபடுத்துகின்றன.

ஈழத் தமிழர்களின் இந்த சனநாயக வழிகளிலான போரட்டத்திற்கு, உலக நாடுகள், அமைப்புக்கள் அளிக்கும் உதவிக்கரம்தான், சிறீலங்காவின் ஈழத் தமிழின அழிப்பை நிறுத்தும் என்பது உலகத் தமிழர்களின் இறுதியும் உறுதியுமான நம்பிக்கை.

இந்த நம்பிக்கையை உலக நாடுகள் உடன் கவனத்தில் எடுத்து ஈழத் தமிழர்களின் இன அழிப்பைத் தடுப்பதற்காக அவர்களின் வெளியக தன்னாட்சி உரிமையை அங்கீகரிப்பது குறித்து சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.  பாதிக்கப்பட்ட நலிவுற்ற உலகின் மக்களாக உள்ள ஈழத் தமிழர்களுக்கு அதீத மனிதாய தேவைகளில் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் உடனுதவிகளை குவைத் யுத்த நெருக்கடியின் போதும், பலஸ்தீனிய பிரச்சினையிலும் சம்பந்தப்பட்ட நாடுகளின் இறைமைகளை மீற எந்த ஐக்கிய நாடுகளின் சட்டங்கள் அனுமதித்தனவோ அந்த அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில்  சிறீலங்காவின் இறைமையை மீறிச் செய்ய வேண்டும்.

187650025 4022128291201248 401743227336883918 n ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாறிவரும் உலகமும், அதனை முறியடிக்கக் களமிறங்கும் சிறீலங்காவும் - சூ.யோ. பற்றிமாகரன்

இன்று கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் ஈழத் தமிழருக்கு உலகத் தமிழினம் தடுப்பூசிகளை மனிதாய அடிப்படையில் கிடைப்பதற்கு எடுத்த முயற்சிகளைக் கூடச், சிறீலங்கா, பௌத்த சிங்களப் பேரினவாதக் கண்ணோட்டத்துடன், வடக்கு கிழக்கு தனி உதவி பெறும் அனைத்துலக முறைமையாக அதனைக் கருதித், தடுத்துள்ளது. இது உலக நாடுகளுக்கு ஈழத் தமிழர்களின் உயிர்கள் அவர்களின் பாதுகாப்பிலேயே உள்ளன என்ற உண்மையை மீண்டும் தெளிவாக உணர்த்துகிறது. அதீத மனிதாய தேவைகளில் உள்ள நலிவுற்று மக்களினமாக உள்ள ஈழத்தமிழ் மக்களுக்குச் சிறீலங்காவின் இறைமையை மீறி, ஐக்கிய நாடுகள் சபை குவைத் பிரச்சினையின் பொழுது கையாண்ட, பலஸ்தீனப் பிரச்சினையில் கையாளுகிற அதே அனைத்துலகச் சட்ட முறைமைகள் வழியாக உதவிட வேண்டும், என்பதே உலகத் தமிழர்களின் ஒருமித்த வேண்டுகோள்.