இஸ்ரேல் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு

இஸ்ரேலின் நடவடிக்கை 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை சட்டங்களை மீறியுள்ளதாக தென்னாபிரிக்கா நேற்று(29) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஒரு இன மக்களை முழுமையாகவே அல்லது பகுதியாகவோ அழிப்பது இனப்படுகொலை என்ற சரத்தின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதமாக காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் இதுவரையில் 21,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 60,000 பேர் காயமடைந்துள்ளனர். பொதுமக்களின் பெருமளவான சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலுடனான இரஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டுள்ள தென்னாபிரிக்கா, இஸ்ரேலிய தூதரகத்தையும் கடந்த மாதம் மூடியிருந்தது.

உக்ரைன் போரில் புச்சா பகுதியில் சில பத்து பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் மீது பிடியாணை பிறப்பித்திருந்த நெதர்லாந்தில் உள்ள இந்த நீதி மன்றம் தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கு தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பது தொடர்பில் எதிர்பார்ப்புக்கள் எழுந்துள்ளன.