இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: ‘ஊடகங்களைத் தாக்குவது போர்க்குற்றங்கள் ஆகும்’ – ஐ.நா

காசாவில் சர்வதேச ஊடக அலுவலகங்களின் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதல்கள் குறித்து தாம் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, காசாவில் அமைந்துள்ள அல்-ஜாலா என்ற 12 மாடி கட்டடத்தில், ஹமாஸ்  போராளிகள் குழுவின் அலுவலகம் இயங்கி வந்ததாக  கூறி, இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் மூலம் அதை இடித்துத் தரைமட்டமாக்கியது.

ஆனால் கட்டடத்தின் உரிமையாளர் இதை மறுக்கிறார். அந்த கட்டடத்தில் அல்-ஜசீரா, ஏ பி மற்றும் பிற ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்தன என்று அவர் குறிப்பிடுகிறார். கடந்த ஆறு நாட்களில், 100க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த இடங்களைக் குறி வைத்துச் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் தலைவர்களைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது.

காசா, மேற்குக் கரை மற்றும் எருசலேமில் திங்கள்கிழமை முதல் வன்முறை மோதல்களில் இதுவரை 41 குழந்தைகள் உட்பட 215க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அன்டோனியோ கூட்டரெஷின் அறிக்கையில்,

“அண்மையில், ஹமாஸ் தலைவர் ஒருவரைக் குறி வைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் பலியான சம்பவம் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் மிகுந்த கவலை அடைந்துள்ளார். இந்த மோதலில் பலியாகும் பாலத்தீனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்தும் அவர் கவலை கொண்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனங்களின் கட்டடத்தின் மீதான சமீபத்திய தாக்குதலுடன் சேர்த்து, அல் ஜாலா என்ற குடியிருப்புப் பகுதி கட்டடமும் தாக்கப்பட்டது, அவரை மேலும் கவலையடையச் செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தனது அறிக்கையில், “சாதாரண குடிமக்களை குறி வைத்து ஊடகங்களைத் தாக்குவது போர்க்குற்றங்கள் என்ற பிரிவின் கீழ் வருகிறது. இத்தகைய செயல் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.