இலங்கை வரும் இராஜதந்திரிகளுக்கு கடும் நிபந்தனை ; அமெரிக்க சர்ச்சையையடுத்து அதிரடி

இலங்கை வரும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான புதிய – கடுமையான விதிமுறைகள் வெளிவிவகாரத்துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் கொரோனா பரிசோதனையை தவிர்த்தார் என்று எழுப்பப்பட்ட சர்ச்சையை அடுத்தே இந்த புதிய விதிமுறைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டுக்கு வருகை தரும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 72 மணித்தியாலங்களுக்கு முன் அவர்கள் புறப்பட்ட நாட்டில் பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என புதிய விதிமுறை கூறுகின்றது.

குறித்த பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க தவறும் அனைத்து இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிசோதனைகளுக்கு முகம் கொடுக்காத குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் மீது தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அவர்கள் 14 நாள்கள் அவர்களின் தங்குமிடத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அதுகுறித்து குறித்த தூதரகத்தினால் முழுவதுமாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்கள் மீண்டும் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவெளவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.