நீதிகேட்பதை நேர்வழியாக்கிய தூயநெஞ்சினன் பாயிரமாகினான்! -புலவர் சிவநாதன்

ஈழத்தாயக எழுச்சியின் வித்தென
இளமைவாழ்வினை ஈந்த மறவனை
வாழவேண்டிய அகவையிற் தன்னுயிர்
விழுதெறிந்தெங்கள் விழிநின்ற வீரனை
சூழநின்றிடும் சூரரின் கொடுமையைச்
சுழற்றி வீசிடும் சுடரென விரிந்தஓர்
காளையை எங்கள் பொன்சிவ குமாரனை
ஆழநிஞ்சினில் ஆராதனை செயும்
நாளிதென்பது யாவருமறிந்ததே!

தாய்மடிதனில் விலங்குடன் உறங்கிய
தமிழினந்தனைத் தட்டியெழுப்பிய
சேய் இவனெனச் செப்பிடல் குற்றமோ?
தீகிளம்பிய திசையெலாம் தமிழரின்
தேசமல்லவோ எரிந்து கிடந்தது?
வாய்திறந்தவர் நாவினைத் துண்டித்த
நாசமல்லவோ நாட்டினில் நிலவிற்று?
பேய்வலம்வரும் பூமியை மாற்றிடப்
போர்தொடுத்திடும் பாதையை நம்பினான்!

தூயநெஞ்சுடன் துணிவுடன் இளைஞர்கள்
தாயகம்தனைக் காத்திடப் புறப்படல்
நியாயமென்றிவன் நெஞ்சினிற் கொண்டொரு
நீதிகேட்பதை நேர்வழியாக்கினான்!
காயமாவி தன்கல்வி தகைமைகள்
காற்றில் வீசியே காவியமாகிய
ஆயிரம் பல ஆயிரம் வீரரை
அணிவகுத்திட வைத்ததியாகியை
பாயிரம் எனப் பாடியவன் புகழ்
பணிந்து நம்பணி யாமும் தொடர்வமே!