இலங்கை துறைமுக விவகாரம் – ஒப்பந்தத்தின் படி செயற்படுமாறு இந்தியா வலியுறுத்தல்

இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ( ECT)  மேம்படுத்துவதற்கு இலங்கை, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் போட்டுக்கொண்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி மூன்று நாடுகளையும் செயற்படுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.  

கடந்த 2019ம் ஆண்டு மே மாதம், இலங்கை அரசின் கீழ் செயல்படும் இலங்கை துறைமுக ஆணையம் ( SLPA) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முந்தைய சிறிசேனா அரசு செய்துகொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் 49 சதவீத பங்குகளையும் இலங்கை அரசு 51 சதவீத பங்குகளையும் வைத்துக்கொள்ளும்.

இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 சதவீதம் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தை 23 தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்த்து வருகின்றனர்.

இந்த ஒப்பந்தம் கொழும்பு துறைமுகத்தின் முக்கிய சரக்கு முனையத்தை “அதானிக்கு” விற்பதாகும் என குற்றம்சாட்டிய தொழிற்சங்கங்கள், இந்த ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்ய கோரியும், துறைமுகம் 100 சதவீதம் அரசின் சொத்தாக இருக்க வேண்டும் எனக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்வது இந்தியாவுடன் நடக்கும் வணிகத்தில் 70 சத வீதம் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி வந்த ராஜபக்சே அரசு, தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டத்திற்கு அடிபணிந்து கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அரசின் கீழ் செயல்படும் இலங்கை துறைமுக ஆணையமே கையாளும் என அறிவித்துள்ளது.

இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள இந்திய அரசு, 2019ம் ஆண்டு மே மாதம், போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்தியா, இலங்கை, ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், மூன்று நாடுகளுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வின் அடிப்படையிலும் அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

நன்றி-THE WIRE