இலங்கையை கடந்து தமிழகத்தை நெருங்கி வரும் புரெவி புயல்!

வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையிலான கடற்பரப்பின் ஊடாக நேற்றிரவு கரையை கடந்துள்ளது.

இலங்கையின் கிழக்கு திசையில் இந்த புயல் நகர்ந்து செல்வதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அது  பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புரெவி’ கன்னியாகுமரி-பாம்பன் இடையே இன்று  நள்ளிரவோ, நாளை  அதிகாலையோ கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று மாலை முதல் இராமேஸ்வரம் பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புரெவி புயல் காரணமாக தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

அதே நேரம் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,000 கனஅடியாக உயர்ந்ததால் முதல்கட்டமாக 1,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

23.5 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.15 அடியாக இருக்கிறது.

மேலும் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,000 கனஅடியாக உயர்ந்ததால் முதல்கட்டமாக 1,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

ஏற்கனவே நிவர் புயலின்போது  செம்பரம்பாக்கம் ஏரியில் சில நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்படுவதால் காவலூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.