இலங்கையும் மியன்மாரும் ஒரு நோக்கு -பி.மாணிக்கவாசகம்

இலங்கையைப் போலவே மியன்மாரும் இனப்பிரச்சினையின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றது. இரண்டு நாடுகளிலும் பௌத்த தேசியம் மேலோங்கி, ஏனைய சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்குகின்ற போக்கில் ஒத்திசைவைக் காண முடிகின்றது.

5 1 இலங்கையும் மியன்மாரும் ஒரு நோக்கு -பி.மாணிக்கவாசகம்

மியன்மாரின் பௌத்த தேசியம்  ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து அரசியல் ரீதியாக அடக்கி ஒடுக்கி வருகின்றது. இலங்கையில் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பிடியில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதன் மேலாதிக்கப்பிடியில் இன மத ரீதியாக நசுக்கப்படுகின்றார்கள்.

6 1 இலங்கையும் மியன்மாரும் ஒரு நோக்கு -பி.மாணிக்கவாசகம்

இரண்டு நாடுகளுமே இன முரண்பாட்டின் காரணமாக நீண்ட கால ஆயுத வன்முறைக்கு முகம் கொடுத்திருக்கின்றன. இன முரண்பாட்டிற்கு முடிவு காண்பதற்காக நிரந்தரமானதோர் அரசியல் தீர்வு என்ற புள்ளியை நோக்கி ஆரோக்கியமான அரசியல் செல்நெறியில் இருந்து இரு நாட்டு அரசுகளும் தவறி இருக்கின்றன. இதனால் இந்த நாடுகளில் சிறுபான்மை இன மக்களை மையப்படுத்திய இனப்பிரச்சினை புரையோடியிருக்கின்றது. உரிய தீர்வு காணப்படாமல் இன வன்முறையும், மத வன்செயல்களும், இனஅழிப்பும், அமைதியின்மையும், ஆக்கிரமிப்பு போக்கும், அடக்குமுறைகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

இரண்டு அரசுகளுமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அடிப்படையான பன்மைத் தன்மையை அரசியலில் பேணுவதற்குத் தயாராக இல்லை. பேரினவாதப் போக்கில்  பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி இந்த நாடுகளில் அரசோச்சப்படுகின்றது.

ஜனநாயக்தின் அடிப்படைக் கொள்கையாகிய பன்மைத் தன்மை, பல்லின மக்களுக்கான சமவுரிமை என்ற அம்சங்களை இந்த அரசுகள் ஏறிட்டு நோக்கவும் தயாராக இல்லை. மாறாக பேரினத்தவராகிய பௌத்தர்களுக்கே இந்த நாடுகள் சொந்தம் என்ற பெருந்தேசியவாதத்தில் ஊறிக் கிடக்கின்றன.

7 இலங்கையும் மியன்மாரும் ஒரு நோக்கு -பி.மாணிக்கவாசகம்

மியன்மாரில் சிறுபான்மை இனத்தவராகிய  ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் குடிசனப் பெருக்கம், அந்த நாட்டின் பேரின மக்களை அச்சமடையச் செய்திருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் இயல்பான இனப்பெருக்கம், நாளடைவில் தங்களை சிறுபான்மை இனமாக்கி விடுமோ என்று அங்குள்ள பௌத்தர்கள் அஞ்சுகின்றார்கள். அந்த அச்சமே  ரோஹிங்கியா மக்களை அவர்கள் அடக்கி ஆளவும், அச்சுறுத்தி ஒடுக்கவும் செய்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் தமிழர்கள் அரசியல் உரிமைகளுடன் அல்லது சம உரிமைகளுடன் வாழ்ந்தால், தமது இனம் அடிமைப்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை சிங்கள மக்கள் மனங்களில் பேரின அரசியல்வாதிகள் ஆழமாக வேரூன்றச் செய்துள்ளார்கள். சிறிய தீவாகிய இலங்கையை இரண்டாகப் பிரித்து அயலில் உள்ள இந்திய மாநிலமாகிய தமிழ்நாட்டுடன் இணைத்து, தமிழர்கள் தங்களை சிறுபான்மை இனத்தவராக்கி விடுவார்கள் என்ற அரசியல் ரீதியான எண்ணத்தையும் அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஆழப் பதியச் செய்துள்ளார்கள்.

அதேவேளை, மியன்மாரைப் போன்று முஸ்லிம் இனத்தவரின் இனப்பெருக்கம் நாளடைவில் சிங்கள மக்களின் எண்ணிக்கையை மேவி, தங்களை சிறுபான்மை இனமாக்கிவிடும் என்ற அச்சத்தையும் பேரின அரசியல்வாதிகள் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் வளர்த்துள்ளார்கள்.

இத்தகைய இன ரீதியான எதிர்கால கற்பனாவாத நிலைப்பாட்டை ஊதிப் பெருப்பித்துள்ள சிங்கள இனவாத அரசியல்வாதிகள், சிங்கள மக்களுக்கென்று உலகில் இலங்கையைத் தவிர வேறு நாடுகள் எதுவும் இல்லை என்ற போக்கில் சிங்கள மக்கள் மனங்களில் எதிர்காலம் குறித்த நீங்காத அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

இத்தகைய அரசியல் மற்றும் பௌத்த மதம் சார்ந்த எண்ணப்பாடுகள் மற்றும் தீர்க்கதரிசனம் மிக்கதாகத் தாங்கள் கருதுகின்ற அரசியல் போக்கின் மூலம் தமிழர்களையும், முஸ்லிம்களையும் சிங்கள பௌத்த மக்களை ஆக்கிரமிக்கப் போகின்ற அரசியல் எதிரிகளாக அவர்கள் அந்த மக்கள்; மத்தியில் சித்தரித்திருக்கின்றார்கள். குறிப்பாக சாதாரண சிங்கள பௌத்த மக்கள் மனங்களில் மட்டுமல்லாமல் சமூக அந்தஸ்துடைய படித்தவர்களிடையேயும் இந்த மனப்பாங்கை ஆழமாக வேரூன்றச் செய்திருக்கின்றார்கள்.

இலங்கையைப் போலவே ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் மியன்மாரில் (அப்போதைய பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம்கள் படித்தவர்களாகவும், ஆங்கிலேய நிர்வாகக் கட்டமைப்புக்களில் அவர்களுக்கு உகந்தவர்களாகவும், செல்வாக்குடன் திகழ்ந்திருக்கின்றார்கள். இலங்கையைப் போலவே 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னர் பர்மாவின் தேசிய இனமாகக் கருதப்படுகின்ற பௌத்த மதத்தைச் சார்ந்த 90 வீத பெரும்பான்மை இனத்தவராகிய பாமர்கள் என குறிப்பிடப்படுகின்ற பர்மியர்கள் அரசியலில் எழுச்சி பெற்றனர்.

அதேவேளை 1974 ஆம் ஆண்டு அந்த நாட்டின் ரக்கின் பிரதேசத்தை  ரோஹிங்கிய முஸ்லிம்கள் தங்களுக்கான மாநிலமாகப் பெறுவதில் வெற்றி பெற்றிருந்தனர்.

பர்மாவின் தேசிய குடிகளாகிய பாமர்கள் என்ற மியன்மாரின் பௌத்தர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மியன்மாருக்குள் வருகை தந்த அராபிய மற்றும் பேர்ஸிய வர்த்தகர்களின் வழித்தோன்றல்கள் என்று அங்குள்ள அறிஞர்கள் கூறியுள்ளனர்.

அயல் நாடுகளாகிய இந்தியா மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம் மக்களைப் போன்ற கரிய தோற்றத்தையும், கலாசாரத்தையும் அலங்கோலத் தோற்றத்தையும்  ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொண்டிருப்பதாகக் கூறி, பெரும்பான்மை இனத்தவராகிய பாமர்கள் – பர்மியர்கள் அவர்களை அந்நியர்களாகக் கருதி ஒதுக்கி வைத்தார்கள்.

பர்மிய பேரின மக்களின்  ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மீதான இன ஒடுக்குமுறைக்கு பர்மாவில் 1962 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவ ஆட்சிப் போக்கு பெரிதும் துணை புரிந்திருக்கின்றது. பர்மாவில் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர், தமது ஆட்சியின் போது, ரோஹிங்கிய முஸ்லிம்கள் பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்கள் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

8 இலங்கையும் மியன்மாரும் ஒரு நோக்கு -பி.மாணிக்கவாசகம்

இது வெறுமனே அரசியல் பிரசாரமாகவோ அரச பிரசாரமாகவோ அல்லாமல் நாட்டின் கல்வித்துறையில் பாடப்புத்தகங்களில் வரலாற்று நிகழ்வுகளாக – பாடங்களாக உட்புகுத்தப்பட்டன. இது மாணவர்களுடைய மனங்களில்  ரோஹிங்கியா முஸ்லிம்களை அந்நியராகவும் தீண்டத்தகாதவர்களாகவும் உருவேற்றுவதற்குப் பெரிதும் உதவி இருக்கின்றது.

ரோஹிங்கியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ரக்கின் மாநிலத்தின் மீது 1977, 1978 ஆகிய ஆண்டுகளில் மியன்மாரின் பேரினவாதிகளினால் ‘அவர்கள் அந்நியர்கள்’ என கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. இந்த வன்முறைகளில் அந்த நாட்டு இராணுவம் முக்கிய பங்கேற்றிருந்தது.

நான்கு மாதங்கள் தொடர்ந்த இந்த பயங்கரவாத முறியடிப்புக்கான இராணுவ நடவடிக்கையின்போது, ஆயிரக்கணக்கான  ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டாரர்கள். ரோஹிங்கியப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பெரும் எண்ணிக்கையானோர் அவயவங்களை இழந்தார்கள். இதனால் ஆறு இலட்சத்துக்கும் அதிகமான  ரோஹிங்கிய முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து, அயல் நாடாகிய பங்களாதேஷில் பாதுகாப்புத் தேடி தஞ்சம் புகுந்தார்கள் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தி இருந்தன.

இந்த நடவடிக்கைகள்  ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை என்றும், இன ஒழிப்பு நடவடிக்கை என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்திருந்தன.

இராணுவத்தினர்  ரோஹிங்கிய முஸ்லிம் பெண்களைப் பெருமளவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது குறித்து அண்மையில் மியன்மார் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் பிபிசி கேள்வி எழுப்பியபோது, அவர் ஏளனமாக சிரித்துவிட்டு, எங்கள் இராணுவத்தினர் பெருமளவில் அவர்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்க மாட்டார்கள் என்று கூறினார். “ஏனென்றால் அந்தப் பெண்கள் மிக அழுக்கானவர்கள்” என்று அவர் விபரித்திருந்தார்.

மியன்மாரில் இராணுவ ஆட்சி மேலோங்கியபோது, அதற்கு எதிராக ஆயுதப் போராட்டம் கிளர்ந்தெழுந்தது. இந்தக் கிளர்ச்சியை அடக்குவதற்காக இராணுவம் மிகமோசமான கெடுபிடிகளைப் பயன்படுத்தியபோது, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டது.

போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால் இந்த மனித உரிமைப் போராட்டத்தில் தீவிரமாக முன்னின்று செயற்பட்ட பர்மிய பௌத்தர்களும், அவர்கள் சார்ந்த பொது அமைப்புக்களும் தங்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட  ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை மனித உரிமை மீறல் என்ற வரையறைக்குள் உட்படுத்த முன்வரவே இல்லை.

பௌத்தம் அஹிம்சையைப் போதிக்கின்றது. ஆனால்  ரோஹிங்கிய முஸ்லிம்களினால் தங்களுடைய நாட்டுக்கு ஆபத்து நேரும் போது அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதற்கெதிராகச் செயற்பட வேண்டி இருக்கின்றது என்று மியாவடி சயடோ என்ற பௌத்த பிக்கு லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் சஷாங்க் பெங்காலி என்ற செய்தியாளரிடம் கூறியிருக்கின்றார்.

‘முஸ்லிம்களில் அநேகமானோர் தீவிரவாதிகள்’ என்பதே மியாவடி சயடோவின் கருத்து. இதனையும் அந்த செய்யதியாளரிடம் அவர் கூறியுள்ளார். பர்மாவின் தேசியவாதிகளுக்கு  ரோஹிங்கிய முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்பதே பர்மாவின் 90 வீதமான பாரம்பரிய குடிகளின் பொதுவான கருத்து.

இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிய அச்சம் தோற்றம் பெறுவதற்கு முன்னரே, பர்மாவில்  ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறுப்பை பர்மிய இராணுவத்தினர் அந்த நாட்டின் மேற்குப் புற மாநிலமாகிய ரக்கன் பிரதேசத்தில் அவர்களுக்கு எதிராக மேற்கொண்ட மிக மோசமான இனவாத இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி இருந்தனர்.

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் திட்டமிடப்பட்ட ஓர் இன அழிப்பு நடவடிக்கை என்பது ஐ.நாவிலும், அனைத்துலக அரங்குகளிலும் சர்வதேச தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இன அழிப்பு நடவடிக்கை குறித்து ஹேக் நகர சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

பர்மாவில் இராணுவ ஆட்சி நிலவியபோது, அதற்கெதிராகப் போராடிய அந்த நாட்டின் தலைவி ஆங் சாங் சூகி தொடர்ச்சியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பிப் போராடியதற்காக அவருக்கு சமாதாத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இருப்பினும் கடந்த வருடம் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இராணுவத்தினரைப் பாதுகாக்கும் வகையிலேயே அவர் தனது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

இராணுவ ஆட்சியின்போது, இராணுவத்தினரால் வரையப்பட்ட புதிய அரசியலமைப்பில் 25 வீத ஆட்சி மன்ற உறுப்பினர் ஆசனங்கள் இராணுவத்தினருக்கென ஒதுக்கப்படுவதற்கு வழிசமைத்துள்ளது. இதனால், இராணுவ ஆட்சி முடிவடைந்து ஆங் சாங் சூகி நாட்டுத் தலைவியாக தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், முழுமையான நிர்வாக அதிகாரம் அற்றவராகவே காணப்படுகின்றார். இராணுவத்தை மீறிச் செயற்பட முடியாத ஒரு தலைவியாகவே அவர் திகழ்கின்றார்.

மியன்மார் நாட்டின் அரசியலில் இராணுவம் மேலாதிக்க நிலைமையைக் கொண்டிருப்பதைப் போன்றதொரு நிலைமையே இலங்கையிலும் காணப்படுகின்றது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள கோத்தாபாய ராஜபக்சவின் நடவடிக்கைகள் அதனை கோடி காட்டும் வகையிலேயே அமைந்திருக்கின்றது.

அமைச்சுச்  செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியமான சிவில் நிர்வாகச் செயற்பாடுகளில் பணி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை அவர் உள்வாங்கி உள்ளார். கிழக்கு மாகாணத்திற்கான தொல் பொருளிடங்களைப் பேணுவதற்கான ஜனாதிபதி செயலணிக் குழு போன்ற சிவில் நடவடிக்கைகள் தொடர்பில் நிழல் அரசாங்க பொறிமுறையாக இராணுவத்தினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கின்றது.

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பதும், அதன் தடுப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் முதன்மை பெற்றிருப்பதும் இந்த அரசின் இராணுவப் போக்கிலான ஆட்சி முறைமைக்கு ஆதாரங்களாகி இருக்கின்றன.

இருபதாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேம்படுத்திக் கொண்டுள்ள அவரால், அடுத்ததாகக் கொண்டு வரப்படுகின்ற புதிய அரசியலமைப்பில் இராணுவத்தினரும் அரசியலில் பிரவேசிப்பதற்கான வழிவகைகள் செய்யப்படவும் கூடும்.

மியன்மாரின் நிலைமைகளும், இலங்கையின் நிலைமைகளும் இனப்பிரச்சினை விவகாரத்தில் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. மியன்மார் அரசுக்கும், இராணுவத்திற்கும் எதிரான மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், இனப்படுகொலை என்பன சர்வதேச அளவில் உறுதியாக முன்னெடுக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. ஆனால் இலங்கையின் நிலைமைகள் சர்வதேச அளவில் அந்த அளவுக்குத் தீவிரமாக முன்னெடுக்கப்படவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆயினும் பொறுப்புக்கூறச் செய்வதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ்த்தரப்பு அரசியல் தீர்க்கதரிசனம், இராஜதந்திரம் என்பவற்றில் மிகவும் பின்தங்கி இருக்கின்றது என்பதை மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.

மொத்தத்தில் மற்றுமொரு முக்கிய விடயமும் இதில் அடங்கியுள்ளது. மியன்மாரைப் பொறுத்தமட்டில், சிறுபான்மையினராகிய ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகளும், இன அழிப்பு நடவடிக்கைகளும் இன்னும் தொடர்கின்றன. அந்த அநியாயங்கள் சர்வதேசத்தின் கண்களுக்குப் புலப்படத்தக்க வகையில் இன்னும் உயிரோட்டமாக இருக்கின்றன.

ஆனால் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் இன அழிப்பு நடவடிக்கைகளும் திரைமறைவில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

4 1 இலங்கையும் மியன்மாரும் ஒரு நோக்கு -பி.மாணிக்கவாசகம்

நாட்டின் ஜனநாயக ஆட்சி என்ற போர்வையில் சிறுபான்மையினருக்கு எதிரான இந்த மறைமுக அநியாயங்களும், அநீதிகளும் மறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பாதிப்புக்கள் சர்வதேசத்தின் கவனத்தை உரிய முறையில் ஈர்க்கத் தவறியிருக்கின்றன என்றே கூற வேண்டும்.