இலங்கையுடனான இந்திய உறவும், இந்தியாவில் ஈழத்தமிழ் அகதிகளும்…

இலங்கையில் தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பான வடக்கு- கிழக்கில் அதிகாரபூர்வமாக ஆயுதப்போர் முடிந்து ஒரு தசாப்தத்தை கடந்து விட்டது. இப்போரின் முடிவு அருகாமையில் இருக்கும் இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கையில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைக்கவில்லை.

தமிழகத்தில் அமைந்திருக்கும் நூற்றுக்கும் அதிகமான அகதி முகாம்களில் வசித்து வரும் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே நாடு திரும்பியிருக்கின்றனர். அகதி முகாம்களில் வசிக்கும் தமிழ் அகதிகளின் முன் இருப்பது இரண்டு வாய்ப்புகள் மட்டுமே.

  1. அகதியாக இந்தியாவிலேயே வாழ வேண்டும் (அல்லது)
  2. நாடு (இலங்கைக்கே) திரும்ப வேண்டும்

அதே சமயம், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பிற நாட்டு அகதிகளுக்கு ஐ.நா. வழியாக ‘மூன்றாவது ஒரு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் கோரும் வாய்ப்பு’ வழங்கப்படுகின்றது. உதாரணமாக, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஒரு குடும்பம் இந்தியாவில் தங்கியிருந்த நிலையில் ஐ.நா. உதவியுடன் தற்போது அவுஸ்திரேலியாவில் தஞ்சம் பெற்றிருக்கின்றனர்.

அர்சோ அமிரி எனும் ஆப்கான் அகதி, அவரது கணவர், தாய், மற்றும் இரண்டு சகோதரிகளுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவில் வாழ்வதற்கான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா பெருந்தொற்று சூழலினால் அவுஸ்திரேலியாவை நோக்கிய அவர்களது பயணம் சாத்தியமற்றதாக உள்ளது.

கடந்த டிசம்பர் 2010இல் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறிய அர்சோ அமிரி எனும் ஆப்கான் அகதி, இந்திய தலைநகர் புதுதில்லியில் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அமிரி, அவரது கணவர், தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுக்கு அவுஸ்திரேலியாவில் வாழ்வதற்கான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

“அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக வீட்டிலிருந்த அனைத்தையும் விற்றுவிட்டு, துணிகளை பெட்டிகளில் அடுக்கி விட்டோம். எனது கணவர் ராவிஷ் தனது வேலையில் இருந்தும் நின்று விட்டார். எனது இரண்டு இளைய சகோதரிகளும் பள்ளிக் கல்வியை நிறுத்தி விட்டனர். மார்ச் 30ஆம் திகதி அவுஸ்திரேலியா செல்ல இருந்த நிலையில், எங்கள் பயணச்சீட்டுகள் இரத்து செய்யப்பட்டு விட்டன,” எனக் கூறியுள்ளார் அமிரி. இவரது பயணம் தற்காலிகமாக கொரோனாவால் முடங்கியுள்ள போதிலும், எதிர்க்காலத்தில் இவர்களது வாழ்க்கை அவுஸ்திரேலியாவில் நிலை பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

இந்த சூழலிலேயே அச்சுறுத்தல் மிகுந்த ஆப்கான் அகதிகளுக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு, அதே அச்சுறுத்தலான கடந்த காலத்தைக் கொண்ட இந்தியாவில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதன் பொருள் இந்தியாவில்  உள்ள ஆப்கான் அகதிக்கு அவுஸ்திரேலியாவில் தஞ்சம் வழங்கப்பட்டது ஏன் என்பதல்ல. மாறாக அப்படியொரு வாய்ப்பு முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியிலும் வாழும் சுமார் 1 இலட்சம் ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை என்பதே நம்முன் இருக்கும் கேள்வி. இதைக்காட்டிலும் மியான்மரிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள்  வாய்ப்பற்ற மக்களாக மோசமான சூழலில் இந்தியாவில் வாழ்கின்றனர்.

இந்தியக் குடியுரிமை சட்டம் 

இலங்கைக்கு நிரந்தரமாக திரும்ப விரும்பாத, தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் பல ஆண்டுகளாக இரட்டைக் குடியுரிமை அல்லது இந்திய குடியுரிமையினை கோரி வருகின்றனர். குடியுரிமை கோரும் இந்த கோரிக்கையினை தமிழகத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளாக கருதப்படும் அதிமுகவும், திமுகவும் கூட தமது தேர்தல் வாக்குறுதிகளாக குறிப்பிட்டுள்ளன.

இவ்விவகாரம் வெறும் கோரிக்கையாக மட்டுமல்லாமல், இது தொடர்பாக மத்திய அரசு தரப்பு அகதி முகாம்களில் ஆய்வை நடத்திய நிகழ்வுகளும் கடந்த காலங்களில் உண்டு. ஆனால், கடந்த ஆண்டு திருத்தப்பட்ட இந்தியக் குடியுரிமை சட்டத்தில் ஈழத்தமிழ் அகதிகளுக்கான குடியுரிமை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

இந்த திருத்தச் சட்டதின் படி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறிய மத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்.  கடந்த 2014 டிசம்பர் 31 இற்கு முன்னதாக இந்தியாவுக்குள் வந்த இவ்வாறான குறிப்பிட்ட அகதிகளுக்கு குடியுரிமைக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம், இது போன்று மத ரீதியாகவும், இன ரீதியாகவும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள, இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவிலிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள், ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் மற்றும் திபெத்திய அகதிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்துடன் புத்த பெரும்பான்மை நாடான இலங்கை, மியான்மர் போன்ற இனப்படுகொலை பின்னணியைக் கொண்ட அருகாமை நாடுகளிலிருந்து வெளியேறியவர்கள் குறித்த எவ்வித கவலையும் தெரிவிக்காத பாஜக தலைமையிலான இந்திய அரசு, அந்நாடுகளுடன் நட்புறவைப் பேணுகின்றன.

இலங்கையிலிருந்து வெளியேறிய தமிழ் அகதிகளில் பெரும்பாலானோர் இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ள நிலையிலும் இத்திருத்தத்தில் உள்ளடக்கப்படவில்லை.  ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய முஸ்லிம் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஷியா மற்றும் அஹமதியா முஸ்லிம் அகதிகளும் இதில் உள்ளடக்கப்படவில்லை. இந்த இடத்திலேயே மத ரீதியிலான பார்வையுடன் ஆட்சியில் அமர்ந்த பாரதீய ஜனதா தலமையிலான இந்திய அரசு, இந்திய குடியுரிமை சட்டத்தை மத ரீதியாக அணுகுவதாக விமர்சனங்கள் உருவாகின்றன.

மாறாக, இத்திருத்தம் தொடர்பான இந்திய அரசின் செய்திக்குறிப்பில், இந்தியாவில் தற்போது 95 ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளதாகவும் அவர்களுக்கு  அடிப்படை உதவிகளை இந்திய அரசும், தமிழக அரசும் செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாகும் பொழுது, குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சட்டத்திலோ அதன் பின் கொண்டு வரப்பட்ட திருத்தத்திலோ எவ்வித வாய்ப்பும் இல்லாத போது யாரிடம் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பது?

இலங்கைக்கு மேலும் மேலும் நிதியுதவி

கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இடையே நடந்த முதல் மெய்நிகர் கூட்டத்தில், புத்தமத உறவுகளை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் டொலர்களை உதவியாக இந்தியா வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், இராணுவம் உள்ளிட்ட இலங்கையின் பாதுகாப்புத் தரப்பை வலுப்படுத்த 50 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க இந்தியா திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்களாக உள்ள போது அவர்களின் நிலப்பரப்பில்(இலங்கை வடக்கு- கிழக்கு) புத்தமத ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, இந்துக்களின் பாதுகாவலர்கள் எனச் சொல்லும் மோடி அரசு புத்தமத உறவுகளை மேம்படுத்த நிதி வழங்குவது ஏன்?

இலங்கையில் பாதுகாப்பு இல்லாமல் இந்தியாவில் இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது மில்லியன் கணக்கிலான டொலர்கள் இலங்கை ராணுவத்திற்கு வழங்கப்படுவது ஏன்?

ஈழத்தமிழர்கள் பற்றிய கரிசனத்தை ஊறுகாய் அளவில் கூட இலங்கையிடம் வெளிப்படுத்தாத வெளியுறவுக் கொள்கையையே இந்தியா மீண்டும் மீண்டும் பின்பற்றுகிறது என்பது நிரூபணமாகிறது.

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் விடிவிலேயே ஈழத்தமிழ் அகதிகளின் எதிர்காலமும் உள்ளது.