“இலங்கையில் மட்டும் அல்ல தமிழகத்திலும் நெருக்கடிகள் உள்ளது” மு.அசீப்

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால்  முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது.

அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசாக உலகின் கவனத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முனைகிறது.

அவ்வாறான சலுகைகளில் ஒன்றுதான் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நினைவு கூரல் அனுமதிகள். ஆனால் தற்போது  அடக்குமுறைக்கு துணைபோகும்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிரிவினை வாதத்தை தூண்டல் அல்லது புலிகளை மீள்கட்டியெழுப்புதல் நடவடிக்கை என கூறி தனிப்பட்ட நபர்கள், மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு பெற்று நினைவுகூரல் நடவடிக்கைக்கு தடை விதித்தல் மூலம் அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக தொடர்ந்தும் மீறி வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக ஊடகவியலாளர் மு.அசீப் ‘இலக்கு’ மின் இதழுக்கு  வழங்கிய செவ்வியில்,

“போர் முடிந்த சில ஆண்டுகள் தமிழகத்தில் நினைவேந்தல்கள் பெரிய அளவில் நடத்தப்பட்டன. தமிழ் தேசிய மற்றும் பெரியாரிய அமைப்புகள் மட்டுமே முன்னின்று அவற்றை நடத்தின. அரசியல்கட்சிகள் அதில் பார்வையாளர்களாகவே பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு, மக்கள் பெரிய அளவில் ஒரு இடத்தில் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் பெரிய அளவில் நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. போரில் மாண்ட நமது உறவுகளுக்கு நினைவேந்தல் நடத்த இலங்கையில் மட்டும் நெருக்கடி இல்லை, தமிழகத்திலும் உள்ளது.

ஆகவே, நினைவேந்தல் நடத்தும் உரிமையை தமிழக முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைந்து மீட்டெடுக்கும் பட்சத்தில், ஈழத்தமிழர்கள் அந்த உரிமையை பெறுவதற்காக நடத்தும் போராட்டம் ஊக்கம் பெறும்.” என்று கூறினார்.